Published : 02 Sep 2014 10:09 PM
Last Updated : 02 Sep 2014 10:09 PM

டுபிளேசியின் அதிரடி சதம் வீண்: தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிக்குள் ஆஸ்திரேலியா நுழைவு

ஹராரேயில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவை 62 ரன்கள் வித்தியாசத்தில் போனஸ் புள்ளியுடன் வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 44 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி தழுவியது.

இருந்தாலும் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மீண்டும் மோதுகின்றன. இன்று தென் ஆப்பிரிக்க அணியில் டுபிளேசி 109 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் விளாசி 126 ரன்கள் எடுத்து 8வது விக்கெட்டாக அவுட் ஆனார். அவர் அவுட் ஆகும் போது தென் ஆப்பிரிக்க வெற்றிக்குத் தேவை 49 பந்துகளில் 69ரன்கள். ஆனால் அவர் ரிச்சர்ட்சன் பந்தில் விசித்திரமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். ரிச்சர்ட்சன் வீசிய பந்தை பின்னால் சென்று மிட்விக்கெட் திசையில் தட்டி விட்டு ஒரு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் அவரது வலது கால் ஆஃப் ஸ்டம்பின் அடியில் பட்டது பைல்கல் கீழே விழ அவர் ஹிட் விக்கெட் ஆனார்.

முன்னதாக ஆம்லா (17), குவிண்டன் டி காக் (1) வெளியேறினர். புதிய பந்து வீச்சு உத்திகளைக் கண்டுபிடித்துக் கொண்ட நேதன் லயன் மிக முக்கியவிக்கெட்டான டிவிலியர்ஸ் (6) விக்கெட்டைக் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா 15.4 ஓவர்களில் 64/3 என்று ஆனது. டுமினியும் 16 ரன்களில் வெளியேற 22.5 ஓவர்களில் 93/4 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா. அதிரடி மன்னன் டி.ஏ. மில்லர், டுபிளேசியுடன் நிலைத்து ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 3 ரன்களில் மிட்செல் ஜான்சன் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். இது ஜான்சனின் சிறப்பான பந்து மில்லரின் ஸ்டம்ப் பறந்தது.

முன்னதாக, டுபிளேசி 57 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் அரைசதம் கண்டார். மெக்லாரன் களமிறங்கி திணறி 17 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்தபோது தென் ஆப்பிரிக்க்கா, 30 ஒவர்களில் 123/5 என்று தட்டுத் தடுமாறியது. அப்போது டுபிளேசி மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை மேலேறி வந்து லாங் ஆனில் மிகப்பெரிய சிக்சரை அடித்து அதிரடியைத் தொடங்கினார். மீண்டும் 2 ஓவர்கள் கழித்து மிட்செல் ஸ்டார்க் பந்தை மேலேறி வந்து நேராக மற்றுமொரு சக்தி வாய்ந்த சிக்சரை அடித்தார். பிறகு நேதன் லயன் பந்தை ஒதுங்கிக் கொண்டு இம்முறை லாங் ஆஃபில் மற்றொரு சிக்சரை விளாசினார். 97 ரன்களில் டுபிளேசி இருந்தபோது 24 ரன்கள் எடுத்த மெக்லாரன் அவுட் ஆனார். பிறகு 94 பந்துகளில் தனது சதத்தை எடுத்தார் அவர். அதில் 7 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.

சதம் அடித்த பிறகு மீண்டும் மிட்செல் ஸ்டார்க் பந்தை இரண்டு சிக்சர்கள் விளாசினார். ஆனால் டேல் ஸ்டெய்ன் 5 ரன்களில் ரன் அவுட் ஆக மீண்டும் ஒரு பின்னடைவு. கடைசியாக 126 ரன்களில் டுபிளேசி ஹிட் விக்கெட் ஆக, 220 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா 44 ஓவர்களில் ஆட்டமிழந்தது. ஜான்சன், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

முன்னதாக ஆஸ்திரேலியா அணியில் பிலிப் ஹியூஸ் 92 பந்துகளில் 85 ரன்களை எடுக்க ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களையும், ஜார்ஜ் பெய்லி 32 ரன்களையும், மேக்ஸ்வெல் 2 ரன்களையும் எடுக்க அந்த அணி 34.4 ஓவர்களில் 152/4 என்று ஆனது. பெய்லி அவுட் ஆகும்போது 41.2 ஓவர்களில் 187/5 என்று இருந்தது. அப்போது மிட்செல் மார்ஷ் அதிரடியை உக்கிரப்படுத்தினார். அவர் 51 பந்துகளில் 5 பவுண்டரி 7சிக்சர்களுடன் 86 ரன்களை விளாசி எடுத்தார். அதிலும் டேல் ஸ்டெய்னின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்தார் மிட்செல் மார்ஷ்.

இதனால் கடைசி 52 பந்துகளில் 95 ரன்கள் குவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 282 ரன்களை எட்டியது. ஒருவித்தில் மிட்செல் மார்ஷ் இன்னிங்ஸ்தான் இந்த வெற்றிக்குக் காரணம், ஆனால் அவரைவிடவும் சிறப்பாக ஆடிய டுபிளேசி இன்னிங்ஸ் வீணானது. ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x