Last Updated : 03 May, 2019 12:33 PM

 

Published : 03 May 2019 12:33 PM
Last Updated : 03 May 2019 12:33 PM

34  ஏழை குழந்தைகளின் உயிர்காக்கும் இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் சுனில் கவாஸ்கர்: கேஷ் கவுன்ட்டர் இல்லா மருத்துவமனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஏழ்மை நிலையில்இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த 34 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்கிறார். இந்த அறுவை சிகிச்சை விரைவில் நடைபெற உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களை அடித்துள்ள சுனில் கவாஸ்கர், அந்த எண்ணிக்கைக்கு இணையாக 34  குழந்தைகளின் இதய சிகிச்சைக்காக உதவ உள்ளார்.

மும்பையின் புறநகரான நவி மும்பையில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி  குழந்தைகளுக்கான சர்வேதச மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார்.

அப்போது, அவர் பேசுகையில், " இந்த பச்சிளங் குழந்தைகளின் இதயங்களில் ஏற்பட்டுள்ள குறைகள் தீர்க்கப்படுவதற்கா காத்திருக்கின்றன. ஒவ்வொரு பச்சிளங்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ள இதயநோய் தொடர்பான நோய்க்கான சிகிச்சை கிடைப்பதை சமூக அந்தஸ்து பேதமில்லாமல் உறுதி செய்ய வேண்டும்.

ஸ்ரீ சத்திய சாய் மருத்துவமனை அதை வழங்கும் என்று நம்புகிறேன் என்னால் முடிந்த அளவு 34 குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவ இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டுள்ள ஸ்ரீ சத்யசாய் மருத்துவமனை குழந்தைகளுக்கு தரமான, இலவசமான மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளது.

இது குறித்து ஸ்ரீ சத்ய சாய் சுகாதாரம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் சி. ஸ்ரீநிவாஸ் கூறுகையில், " இந்தியாவில் 2.40 லட்சம் குழந்தைகள் இதயக் கோளாறுடன்  பிறக்கின்றன. இந்த குழந்தைகளில் 40 சதவீதம் குழந்தைகள் தங்களின் 3-வது வயதை நிறைவடைதற்குள்ளாகவே இறந்துவிடுகின்றன.

மிகவும் அதிகமான செலவாகக் கூடிய இதய சிகிச்சை, அறுவை சிகிச்சை பெரும்பாலான ஏழை குடும்பங்களின் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு கிடைக்க வேண்டும், உயிர்பிழைக்க வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் தரமான சுகாதாரத் திட்டத்தின் கீழ் இந்த இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் சாதி, மதம், தேசியம், பாலினம் பாராமல் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் " எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் உள்ள நயா ராய்பூர், ஹரியானாவில் உள்ள பல்வால் நகரில் செயல்பட்டு ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனைகள் இதுவரை 78 ஆயிரம் குழந்தைகளுக்கு இதயநோய் தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளன. 6, 178 குழந்தைகளுக்கு இதயஅறுவைசிகிச்சையை இலவசமாக செய்துள்ளன. இந்த மருத்துவமனையின் சிறப்பு அம்சமே இந்த மருத்துவமையில் பணம் செலுத்தும் இடம் இல்லாமல் இருப்பதுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x