Published : 24 May 2019 08:25 PM
Last Updated : 24 May 2019 08:25 PM

உ.கோப்பை பயிற்சி ஆட்டத்தில் தகராறு: ஒரே ஓவரில் 5 பவுண்டரி அடித்து பாக். பவுலரை நிலைகுலைய வைத்த ஆப்கான் வீரர்

ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய்.  இவர் முன்பு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட்டில் 30 ஓவர்கள் தான் நின்றால் இரட்டைச் சதம் அடிப்பேன் என்று சூளுரைத்த அதி தன்னம்பிக்கை அதிரடி வீரர் ஆவார்.

 

ஜெயசூரியா, ஆடம் கில்கிறிஸ்ட் போன்று இவர் பெரிய அச்சுறுத்தலாக வளர வாய்ப்புள்ளது.

 

இந்நிலையில் பிரிஸ்டலில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 262 ரன்களுக்கு மட்டுப்படுத்திய ஆப்கான் அணி தொடர்ந்து இலக்கை விரட்டி வருகிறது. 15 ஓவர்களில் 92/1 என்று மிரட்டி வருகிறது.

 

மொகமது ஷஸாத்தும் அதிரடி வீரர்தான், ஆனால் சஸாய் வேறு ஒருரகம், இடது கை வீரரான இவர் இந்த உலகக்கோப்பையில் பெரிய அச்சுறுத்தல்தான். இலக்கை விரட்டும் போது ஒரு முனையில் ஷஸாத், மொகமது ஆமீரை 2 பவுண்டரிகளையும் ஷாஹின் ஷா அப்ரீடியை 1 பவுண்டரியும் அடிக்க, 4வது ஓவரில் ஷாஹின் ஷா அஃப்ரீடி பவுலிங் வீச வந்தார்.

 

எதிர்கொண்டது இளம் புயல் ஹஸ்ரதுல்லா சஸாய், முதல் பந்து ஷார்ட் பிட்ச், போடாதே என்று மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார். பிறகு ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்தை மிட்விக்கெட்டில் அடுத்த பவுண்டரி. இருவரும் முறைப்பைப் பரிமாறிக் கொண்டனர். பிறகு ஸ்லோ பந்து மிட் ஆன் மிட்விக்கெட் இடையே பவுண்டரி.

அடுத்த பந்து நல்ல பவுன்சர், ஷாஹின் ஷா அஃப்ரீடி அருகில் வந்து சில வார்த்தைகளை முணுமுணுத்தார், காரணம் பந்தை அமைதியாக ஆடாமல் விட்ட சஸாய், அப்ரிடியை ’போய் பந்து வீசு’ என்பது போல் செய்கை செய்தார். அடுத்த பந்து ஸ்கொயர் லெக்கில் காணாமல் போக கடைசி பந்து ஒரு சேஞ்சுக்காக எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி ஆனது. 5 பவுண்டரிகள். இப்போது பவுன்சர் போடு என்பது போல் ஏதோ சொல்ல ஷாஹின் ஷா அஃப்ரீடி கடுப்பாக வாக்குவாதம் வரும் சமயத்தில் நடுவர் தலையிட்டு பிரச்சினையை சமாதானம் செய்தார்.  உலகக்கோப்பை போட்டிகள் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரே ஓவரில் 5 பவுண்டரி, சிறு வாக்குவாதம், ஒரு சரியான சவால்.. நடுவர் தலையீடு என்று தொடங்கியுள்ளது.

 

இந்த ஓவர் மட்டுமல்லாது ஷேன் வாட்சனையே 2015-ல் ஆட்டிப்படைத்த வஹாப் ரியாஸையும்  2 புல் ஷாட் சிக்ஸ், ஒரு நேர் பவுண்டரி என்று விளாசி 27 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர் என்று 49 ரன்கள் எடுத்து பிரமாதமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததோடு பாகிஸ்தானின் பிரைம் பவுலரையே ஒரு கை பார்த்து விட்டார் சஸாய்.

 

அப்ரீடி 3 ஓவர்களில் 34 ரன்கள் விளாசப்பட்டார் இதில் 8 பவுண்டரிகளை அவர் விட்டுக் கொடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x