

கேப் கோப்ராஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை 15 ரன்கள் கொடுத்து கைப்பற்றிய பஞ்சாப் பவுலர் அக்ஷர் படேல் ‘உண்மையான மேட்ச் வின்னர்’ என்று கேப்டன் ஜார்ஜ் பெய்லி புகழாரம் சூட்டியுள்ளார்.
"அக்ஷர் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக வீசுகிறார், எங்களுக்கு அவர்தான் மேட்ச் வின்னர். அவரது ஆல்ரவுண்ட் திறமைகள் சிறப்பு வாய்ந்தது. பேட்டிங், அவரது பீல்டிங் திறமை, என்று அனைத்திலும் அவர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவராகத் திகழ்கிறார். ஆனாலும் அவரது பந்து வீச்சு அனைத்தை விடவும் சிறப்பாக உள்ளது.
அவர் ரன்களைக் கட்டுப்படுத்துகிறார், விக்கெட்டுகளைக் கைப்பற்றுகிறார், அவர் முழுக்கை சட்டை அணியாமல் அரைக்கை சட்டை அணிந்து கொண்டு இதனைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார் ஜார்ஜ் பெய்லி.
அரைக்கை சட்டை அணிந்து அக்ஷர் வீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் போது ஜார்ஜ் பெய்லி, புதிர்ப் பந்து வீச்சாளர்கள் முழுக்கை சட்டை அணிந்து கொண்டு பந்தை அவ்வப்போது த்ரோ செய்வதையே குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் அஸ்வின் ஒருமுறை கூறும் போது நாம் கையை எவ்வளவு மடக்குகிறோம் என்பதை முழுக்கை சட்டை அணிந்து வீசும்போது கணிக்க முடியாது என்று கூறியதுடன் பெய்லியின் கூற்றை இணைத்து நோக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் கூறும் போது, கிங்ஸ் லெவன் வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானாவை மிகவும் பாராட்டினார். அதுவும் அவர் வீசிய கடைசி 2 ஓவர்கள் ‘தனித்துவமானது’ என்று புகழ்ந்தார் பெய்லி.