இலங்கை வீரர் ஜெயசூர்யா குறித்து வதந்தி; அஸ்வின் அதிர்ச்சி: நடந்தது என்ன?

இலங்கை வீரர் ஜெயசூர்யா குறித்து வதந்தி; அஸ்வின் அதிர்ச்சி: நடந்தது என்ன?
Updated on
2 min read

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா இறந்துவிட்டதாக சமூக ஊடங்களில் பொய்யான செய்தி பரவியதையடுத்து, இந்திய அணி வீரர் ரவிச்சந்திர அஸ்வின் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஆனால், அது வதந்தி என்று தெரிந்ததையடுத்து, அவர் நிம்மதி அடைந்தார். மேலும், தன்னைப் பற்றி வதந்திகள் ஏதும் பரப்ப வேண்டாம் என்றும் ஜெயசூர்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வலம் வந்த செய்தி

இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூர்யா சமீபத்தில் கனடா நாட்டுக்குச் சென்றதாகவும்,  அங்கு சாலையில் ஜெயசூர்யா நடந்த சென்றபோது, அவர் மீது ஒரு கார் மோதியதில் அவர் படுகாயமடைந்தார் என்றும்  கார் ஓட்டியவர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தபோது சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயசூர்யா பரிதாபமாக உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

கனடாவில் உள்ள இலங்கை தூதரகமும் ஜெயசூர்யா மரணத்தை உறுதி செய்ததாகவும், டொரண்டோ நகரில் நாளை நடக்கும் இறுதிச்சடங்கில் இலங்கை அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என்றும் சமூக ஊடகங்களில் செய்தி வலம் வந்தது.

இந்த பொய்யான செய்தியைப் பார்த்த இந்திய அணியின் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சி தெரிவித்து தனது ட்விட்ர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். அதில், " ஜெயசூர்யா குறித்த செய்தி உண்மையானதா? வாட்ஸ் அப்பில் நான் ஜெயசூர்யா குறித்த செய்தியை அறிந்தேன், ஆனால் ட்விட்டரில் இது குறித்து ஏதும் இல்லை. சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஆனால், தன்னைப் பற்றி சமூக ஊடங்களில் வலம் வரும் செய்தியை ஜெயசூர்யா மறுத்துள்ளார். தான் சமீபத்தில் கனடாவுக்குச் செல்லவில்லை இலங்கையில்தான் இருக்கிறேன் என்று ஜெயசூர்யா தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜெயசூர்யா ட்விட்டரில் கூறுகையில், " என் உடல்நலன் சார்ந்து சில விஷமத்தனமான இணையதளங்கள் பொய்யான செய்தி வெளியிடுகின்றன. அதை யாரும் நம்பாதீர்கள். நான் உடல்நலத்துடன் இருக்கிறேன். நான் இலங்கையில்தான் இருக்கிறேன். நான் கனடாவுக்கு சமீபத்தில் செல்லவில்லை. தயவுசெய்து பொய் செய்தி பகிர்வதைத் தவிர்க்கவும்" எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் நடந்ததாக கூறப்படும் நிலையில் அதுதொடர்பான விசாரணைக்கு ஜெயசூர்யா ஒத்துழைக்க மறுத்ததால், 2 ஆண்டுகளுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் பங்கேற்க ஐசிசி கடந்த ஜனவரி மாதம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in