

ஸ்டீவ் ஸ்மித்தின் அபாரமான சதத்தால் சவுத்தாம்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.
ஸ்மித், வார்னர் களமிறங்கும் போது மைதானத்தில் இருந்த இங்கிலாந்தின் பார்மி ஆர்மி ரசிகர்கள் குழு ஏய் ஏமாற்றுக்காரா (Cheat fellows) என்று சத்தமாக கோஷமிட்டு கிண்டல் செய்தனர். அவர்களுக்கு ஸ்மித் தனது பேட்டிங் மூலம் சதம் அடித்து தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு ஆண்டு தடைக்குப் பின் வார்னர், ஸ்மித் இருவரும் தங்கள் நாட்டுக்காக களமிறங்கிய முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் ஸ்மித் சதம் அடித்துள்ளது, உலகக் கோப்பைப் போட்டியில் அனைத்து அணிகளுக்கும் எச்சரிக்கையாகவும், மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிவிட்டேன் என்பதையும் உணர்த்தியுள்ளது.
பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை முடிந்து ஸ்மித், வார்னர் இருவரும் உலகக்கோப்பை போட்டிக்கு விளையாட வந்துள்ளனர். இவர்களைக் கிண்டல் செய்யலாமல், கண்ணியமாக நடத்த வேண்டும், மரியாதையுடன் பேச வேண்டும் என்று இங்கிலாந்து வீரர் மொயின் அலி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையையும் மீறி, இங்கிலாந்தின் பார்மி ஆர்மி ரசிகர்கள் குழு நேற்று நாகரிகமின்றிப் பேசினார்கள்.
வார்னர், ஸ்மித் களமிறங்கிய போது, அவர்களை நோக்கி ஏய்... ஏமாற்றுக்காரா, ஏமாற்றுக்காரா என்று சத்தமாக கோஷமிட்டவாரே மைதானத்தை பார்மி ஆர்மி குழுவினர் வலம் வந்தனர். இந்த விஷப்பேச்சு வார்னர், ஸ்மித் இருவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் சேர்த்தது. 298 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 285 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்தும், சேஸிங் செய்தும் மிரட்டிவந்த இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் 298 ரன்களை சேஸிங் செய்யமுடியாமல் தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் நிலைக்காமல் பேட் செய்தது முக்கியக் காரணமாகும். பயிற்சிப் போட்டித்தானே என்ற மெத்தனத்துடன் பேட் செய்தனர். வெற்றியின் அருகே வரை வந்த இங்கிலாந்து அணியில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை ஸ்மித்தைத் தவிர பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 30 ரன்களுக்கு உள்ளாகவே ஆட்டமிழந்தனர். ஆனால், ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின் தாய்நாட்டு அணிக்காக களமிறங்கிய ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்து தனது பேட்டிங் ஃபார்மை நிரூபித்தார். 102 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து ஸ்மித் ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
பிஞ்ச் (14),வார்னர் (43), கவாஜா(31), ஸ்டோனிஸ்(13), காரே(30) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் இயான் பிளங்கெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
298 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் (52), வின்ஸ் (64) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு விளையாடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்களான ஜேஸன் ராய் (32), பேர்ஸ்டோ (12), ஸ்டோக்ஸ் (20), மொயின் (22), வோக்ஸ் (40), பிளங்கெட் (19) என நிலைத்து பேட் செய்யாமல் விரைவாக ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பிய ஜேஸன் ராய், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இந்தப் போட்டியில் மோசமாக ஆடியது வேதனையாகும். 300 ரன்களை எளிதாக சேஸிங் செய்த இங்கிலாந்து அணி 298 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் 49.2 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆட்டமிழந்ததது.
ஆஸ்திரேலியத் தரப்பில் பந்துவீச்சில் நாதன் லயன் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினார். லயன் 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மற்ற வீரர்கள் ஓவருக்கு சராசரியாக 5 ரன்கள் விட்டுக்கொடுத்தனர். பெஹரன்டார்ப், ரிச்சார்டஸன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.