Last Updated : 26 May, 2019 05:12 PM

 

Published : 26 May 2019 05:12 PM
Last Updated : 26 May 2019 05:12 PM

உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி: இன்சமாம் உல்ஹக் ஆவேசம்

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வென்றால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தியாவை வெல்ல முடியவில்ல என்ற பெயரை இந்த முறை மாற்றிக்காட்டுவோம் என்று பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாக் உல் ஹக் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பரமவைரிகளாக கருதப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே இருநாட்டு ரசிகர்கள் மத்தியில் அனல் பறக்கும். இரு அணிகளும் தோல்விகளையும், வெற்றிகளையும் ருசித்திருந்தாலும், உலகக்கோப்பை போட்டியில் மட்டும்  இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் அணியால் தோற்கடிக்கவே முடியவில்லை. அந்த சாதனையை இந்திய அணி தக்கவைத்து வருகிறது.

கடந்த 1975-ம் ஆண்டில் இருந்து இதுவரை 12 உலகக்கோப்பை போட்டியிலும் ஒருமுறைகூட இந்திய அணியை பாகிஸ்தான் அணியால் வெல்ல முடியவில்லை என்பது அந்த அணியினருக்கு மிகப்பெரிய தலைக்குனிவாக இருந்து வருகிறது. இதை அந்த அணி வீரர்கள் பலரும் வெளிப்படையாகவே  இதற்கு முன் தெரிவித்துள்ளனர்.

இப்போது அந்த அணியின் தேர்வுக்குழுத் தலைவர் இன்சமாம் உல் ஹக் இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், பயிற்சி ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்துள்ளது வியப்பாக இருக்கிறது.

இந்த சூழலில் கராச்சியில் நிருபர்களுக்கு இன்சமாம் உல் ஹக் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை மக்கள் மிகவும் உன்னிப்பாகப் பார்க்கிறார்கள், அதை கவுரவமாகவும் கருதுகிறார்கள். ஆனால், எங்களால் ஒரு உலகக் கோப்பையில்கூட இந்தியாவை வெல்ல முடியவில்லை. இந்தக் குறையை இந்த உலகக்கோப்பை போட்டியில் நாங்கள் தகர்ப்போம் என்று நம்புகிறோம்.

ஆனால், இந்த முறை நாங்கள் வலிமையாக அணியாக வந்துள்ளோம். உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழத்தினால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

எங்களைப் பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுடன் விளையாடும் போட்டி என்பது சாதாரணப் போட்டி என்று கருதிவிட முடியாது. இந்தியாவை மட்டுமல்ல மற்ற அணிகளையும் வெல்லும் திறமை எங்கள் அணியினருக்கு இருக்கிறது.

அணியில் 15 வீரர்களைத் தேர்வு செய்வது என்பது மிகவும் எளிதான பணி அல்ல. ஏராளமான அழுத்தங்களுக்கு இடையில்தான் இந்த வீரர்களைத் தேர்வு செய்கிறோம். உதாரணமாக, உலகக்கோப்பை போட்டிக்காக வேகப்பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வது கடினமான பணி, ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள் இதில் யாரைத் தேர்வு செய்வது, முகமது அமீர், ஜூனைத் கான், உஸ்மான் ஷென்வாரி ஆகியோர் இருந்தார்கள்.

மிகுந்த கவனத்துடன்தான் ஹஸ்னனைத் தேர்வு செய்தோம். ஏனென்றால்,புதிய கோணத்தில் பந்துவீசும் ஹஸ்னன் 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசக்கூடியவர். மற்ற பந்துவீச்சாளர்கள் சராசரியாக 130 முதல் 140 கி.மீ. வேகத்தில் வீசும் திறனுடையவர்கள்.

உலகக்கோப்பை போட்டியைப் பொறுத்தவரை சிறிய அணிகள், பெரிய அணிகள் என யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆப்கானிஸ்தான் அணிகூட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்வியைத் தரும்.

அதேசமயம், ஆப்கானிஸ்தானை வென்றாலும், இங்கிலாந்தை வென்றாலும் கிடைப்பது 2 புள்ளிகள்தான். ஆனால், எந்த அளவுக்குப் போட்டியில் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

பயிற்சிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், உலகக்கோப்பை போட்டியை வெற்றிகரமாகத் தொடங்க நினைக்கிறோம். முதல் போட்டியில் வெற்றி என்பது மிகவும் முக்கியமானது. அந்த வெற்றியைப் பெறுவதற்கு எங்களுக்குத் தகுதி இருக்கிறது.

என்னுடைய கணிப்பின்படி, இந்த முறை அரையிறுதிக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிவரை வரக்கூடும்''.

இவ்வாறு இன்சமாம் உல் ஹக் தெரிவித்தார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x