Published : 10 May 2019 09:51 PM
Last Updated : 10 May 2019 09:51 PM

ஹர்பஜன் 150; ஸ்பின்னர்கள், சாஹர், பிராவோ அபாரம்: டெல்லி கேப்பிடல்ஸை 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது சிஎஸ்கே

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நாக் அவுட் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் டெல்லி கேப்பிடல்ஸை பேட் செய்ய அழைத்து அந்த அணியை 147 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார்.

 

கடைசியில்  20வது ஓவரை ஜடேஜா வீச நேர்ந்தது. அதில் ட்ரெண்ட் போல்ட் ஒரு சிக்ஸரை விளாச, சற்றும் எதிர்பாராத வகையில் இஷாந்த் சர்மா இறங்கி வந்து லாங் ஆனில் ஒரு தூக்குத் தூக்க அங்கு டுபிளேசிஸ் இடது புறம் ஒரு பெருமுயற்சி செய்து பயனளிக்காமல் பவுண்டரி சென்றது கூட ஆச்சரியமில்லை. கடைசி பந்தை ஒதுங்க்கியபடியே மேலேறி வந்து லாங் ஆஃபில் ஒரே அறை அறைய பந்து சிக்சருக்குப் பறந்தது. ஜடேஜாவின் கடைசி ஓவரில் 16 ரன்கள் வர டெல்லி கேப்பிடல்ஸ் 147/9 என்று மட்டுப்பட்டது.

 

ரிஷப் பந்த் மேல் அதிக எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் எதிர்முனையில் யாரும் நிற்காமல் போக ரிஷப் பந்த்தையும் தனது களவியூகத்தினால் தோனி கட்டிப்போட பந்த் 25 பந்துகளில் 2 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து லாங் ஆனில் பெரிய ஷாட்டுக்கு முயன்று பிராவோவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

இவர் வெளியேறிய பிறகு டெல்லி அணி 8 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தது. இல்லாவிட்டால் ஸ்கோர் 135தான். ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். ரூதர்போர்ட் ஒரு அசாத்தியமான சிக்சரை ஹர்பஜன் வீசிய 16வது ஓவரில் லாங் ஆஃபின் மேல் அடித்தார். பின்னால் சென்று ஆஃப் திசையில் லாங் ஆஃப் மேல் அடிப்பது மிகமிகக் கடினம், அது சிக்ஸ் ஆனது, ஆனால் அதே ஓவரில் ஹர்பஜன் அவரை ஷார்ட் தேர்ட்மேனில் இதற்காகவென்றே நிறுத்தப்பட்ட பீல்டரிடம் கேட்ச் கொடுக்க வைத்தார், இதுதான் ஹர்பஜனின் ஐபிஎல் 150வது விக்கெட்டாகும்.

 

முன்னதாக அபாய தொடக்க வீரர் பிரிதிவ் ஷா, தீபக் சாஹரை அபாரமான மிட்விக்கெட் புல்ஷாட் பவுண்டரி அடித்தார், அதே ஷாட்டை சாஹரின் அடுத்த ஓவரில் முயன்று எல்.பி.ஆகி 5 ரன்களில் காலியானார். முன்னதாக ஷர்துல் தாக்கூர் ஓவரி ஷிகர் தவண் புரட்டி எடுத்து 3 பவுண்டரிகளை விளாச ஒரு ஓவர் 13 ரன்கள் என்று தாக்கூரின் கடைசி ஓவர் ஆனது அது. தோனி அவரை அதன் பிறகு கொண்டு வரவில்லை.

 

தீபக் சாஹர் அற்புத கட்டுப்பாட்டுடன் வீச  கொலின் மன்ரோ, ஷிகர் தவணும் அடிக்க முடியவில்லை அவர் 3 ஒவர் 16 ரன் ஒரு விக்கெட்.  இடையே ஷிகர் தவன் 18 ரன்களில் ஹர்பஜன் சிங்கின் திரும்பிய பந்துக்கு எட்ஜ் ஆகி தோனியின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். பவர் ப்ளேயில் 6 ஓவர்களில் 41/2 என்று இருந்தது டெல்லி கேப்பிடல்ஸ்.

 

பவுண்டரிகள் அருக ஆரம்பித்தன, மன்ரோ அந்த வறட்சியை முறியடித்து ஹர்பஜனை 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால் 24 பந்துகளில் 27 எடுத்திருந்த இவர் ஜடேஜாவின் பந்தை ஸ்லாக் ஸ்வீப் ஆடி குறிபார்த்து நேராக ஒரேயொரு பீல்டர் பிராவோ கையில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷ்ரேயஸ் அய்யர் 18 பந்துகளில் 13 ரன்கள் என்று கட்டிப்போடப்பட்ட வெறுப்பில் இம்ரான் தாஹிர் பந்தில் வீழ்ந்தார். அக்சர் படேல் 3 ரன்களில் பிராவோவிடம் காலியானார்.

 

ரூதர்போர்ட் களமிறங்கி இம்ரான் தாஹீரின் 4 கூக்ளியில் விசிறி விசிறி காற்றுதான் வந்தது. கடைசியில் இவரும் 10 ரன்களில் ஒரு சிக்சருடன் ஹர்பஜனின் 150வது விக்கெட்டாக வீழ்ந்தார். ரிஷப் பந்த் பெரும்பாலும் கட்டிப்போடப்பட ஒரு வழியாக இம்ரான் தாஹிரை ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ் விளாசினார்.  இன்னொரு அதிரடி வீரர் கீமோ பால் 3 ரன்களில் பிராவோவின் துல்லிய லெக் ஸ்டம்ப் யார்க்கரில் பவுல்டு ஆனார். 19வது ஓவரில் பந்த் 38 ரன்களில் திருப்தியற்ற இன்னிங்சில் காலியாக அதன் பிறகு மிஸ்ரா, போல்ட், இஷாந்த் சர்மாவின் ஆட்டத்தினால் 8 பந்துகள்ல் 22 ரன்கள் வர டெல்லி கேப்பிடல்ஸ் 147/9 என்று மடிந்தது.

 

சென்னை தரப்பில் பிராவோ, சாஹர், ஹர்பஜன், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இம்ரான் தாஹிர் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.  எளிய இலக்கை எதிர்த்து சென்னை அணி ஆடி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x