முத்தரப்பு தொடர்: 327 ரன்கள் நொறுக்கிய அயர்லாந்து; மகாவிரட்டலில் வென்ற மே.இ.தீவுகள்

முத்தரப்பு தொடர்: 327 ரன்கள் நொறுக்கிய அயர்லாந்து; மகாவிரட்டலில் வென்ற மே.இ.தீவுகள்
Updated on
2 min read

அயர்லாந்தில் மே.இ.தீவுகள், அயர்லாந்து, வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேசத் தொடரின் 4வது ஆட்டத்தில் நேற்று அயர்லாந்து 327/5 என்று நொறுக்க மே.இ.தீவுகள் மகா விரட்டலில் 331/5 என்று வெற்றி பெற்றது.

அயர்லாந்து அணியின் பால்பர்னி 135 ரன்களை விளாசியதை மே.இ.தீவுகளின் அம்ப்ரிஸ் தன் 148 வெற்றி ரன்களால் மறக்கடிக்கச் செய்தார். பால்பர்னி 124 பந்துகளில் 12 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 135 ரன்கள் எடுக்க, சுனில் அம்ப்ரிஸ் 126 பந்துகளில் 19 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 148 ரன்களை வெளுத்துக் கட்ட 47.5 ஒவர்களில் 331/5 என்று வென்றது மே.இ.தீவுகள். சுனில் அம்ப்ரீஸின் முதலாவது சர்வதேச ஒருநாள் சதமாகும் இது.

ஜான் கேம்பல் இதே தொடரில் துவக்கத்தில் இறங்கி 179 ரன்களை விளாசி சாதனை படைத்த பிறகு காயம் காரணமாக விலகியதால் அம்ப்ரீஸுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் சுனில் அம்ப்ரீஸுக்கு உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு இல்லை.

அம்ப்ரீஸ் 40வது ஓவர் வரை ஆடி வெற்றியை உறுதி செய்தார். இவர் ஆட்டமிழந்தவுடன், ஜானதன் கார்ட்டர், ஜேசன் ஹோல்டர் இருவரும் சேர்ந்து ஓவருக்கு 10 ரன்கள் வீதம் வெளுத்துக் கட்டி 47.5 ஓவர்களில் முடித்தனர்.

அயர்லாந்து பந்துவீச்சு படுமோசம், பவுண்டரி அடிக்கக் கூடிய பந்துகளை அதிகம் வீசினர். ஷேய் ஹோப் 30 ரன்கள் எடுக்க அம்ப்ரீசும் ஹோப்பும் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 12 ஒவர்களில் 84 ரன்கள் சேர்த்தனர். ஹோப் 30 ரன்களில் வெளியேற, டேரன் பிராவோ இறங்கி 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவரால் பந்தை அடிக்க முடியவில்லை, ஆனால் அம்ப்ரீஸ் ரன் ரேட்டை உயர்த்தியபடியே இருந்தார்.

ராஸ்டன் சேஸ் (46 ரன், 53 பந்து), அம்ப்ரிசுடன் சேர்ந்து 128 ரன்களை 116 பந்துகளில் சேர்க்க சேஸ் அவுட் ஆகும் போதே மே.இ.தீவுகள் ஸ்கோர் 39வது ஓவரில் 240 ஆக, சுனில் அம்ப்ரிஸ் 148 ரன்களில் ஆட்டமிழக்கும் போது 40 ஓவர்கள் முடிவில் 252/4 என்று ஆனது.

அதன் பிறகு  கார்ட்டர் 25 பந்துகளில் 46 ரன்களையும் கேப்டன் ஹோல்டர் 24 பந்துகளில் 36 ரன்களையும் விளாசி 8 ஓவர்களில் 75 ரன்களை விளாச மே.இ.தீவுகள் எளிதில் விரட்டியது.

முன்னதாக சத நாயகன் பால்பர்னி, தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் (77 ரன் 98 பந்து) மற்றும் கெவின் ஓ’பிரையன் (63 ரன், 40 பந்து) ஆகியோருடன் அமைத்த கூட்டணியால் அயர்லாந்து 327 ரன்களை எட்டியது.

மே.இ.தீவுகள் தரப்பில் காட்ரெல், கிமார் ரோச் ஆகியோர் 6.7 மற்றும்  6.2 என்று ஓவருக்கு சராசரி ரன் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டனர். கேப்ரியல் 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஹோல்டர் 55 ரன்களுக்கு 1 விக்கெட்டை வீழ்த்தினார்.  ஆட்ட நாயகன் சுனில் அம்ப்ரீஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in