

ஐபிஎல் கிரிக்கெட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று இயன் போத்தம் கூறியதையடுத்து, பிரச்சினை ஐபிஎல் அல்ல. அது கிரிக்கெட்டிற்கு நல்லதுதான், ஆனல் அதிகாரக் குவிமையம் பிசிசிஐ-யிடம் இருப்பதே பிரச்சினை என்கிறார் ஜெஃப் பாய்காட்.
தி டெலிகிராப் பத்திரிகையில் அவர் கூறியிருப்பதாவது: ஐபிஎல். பிரச்சினை என்று நான் கருதவில்லை, அது கிரிக்கெட்டிற்கு நல்லதுதான், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வானளாவிய அதிகாரமே பிரச்சினை.
ஒரு வாரியத்திடம் அதிகாரம் குவிந்து கிடப்பதும் மற்ற நாட்டு வாரியங்கள் இதனைக் கண்டு அஞ்சுவதுமே கிரிக்கெட்டிற்கு நல்லதல்ல. ஐசிசி-யின் அனைத்து முடிவுகளையும் பிசிசிஐ எடுக்கிறது, இது நல்ல அறிகுறியல்ல.
முன்பு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இரண்டு வாக்குகள் இருந்தன. அதுவும் நியாயமற்றதே. அப்போது தாங்கள் நியாயமற்றமுறையில் நடத்தப்பட்டதாக இப்போது அதிகாரப் பீடத்தில் இருக்கும் வாரியம் நினைத்திருக்கலாம். அதற்காக இப்போது ஒரு வாரியம் கிரிக்கெட்டை நடத்துவதும் தவறுதான். இரண்டு தவறுகள் சேர்ந்து ஒரு ‘சரி’யை உருவாக்கிவிடாது. ஆகவே ஐபிஎல் பிரச்சினையல்ல இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வானளாவிய அதிகாரமே பிரச்சினை”
என்று கூறியுள்ளார் பாய்காட்.