தோனி இல்லாவிட்டால் சிஎஸ்கே நிலைமை கஷ்டம்தான்: ரோஹித் சர்மா வெளிப்படை

தோனி இல்லாவிட்டால் சிஎஸ்கே நிலைமை கஷ்டம்தான்: ரோஹித் சர்மா வெளிப்படை
Updated on
2 min read

தோனி இல்லாமல் விளையாடும் சிஎஸ்கே அணியால் ரன்களை சேஸிங் செய்வது மிகக்கடினம்தான் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி உடல்நலக் குறைவால் நேற்றைய போட்டியில் பங்கேற்கவில்லை. இந்த சீசனில் 2-வது முறையாக அவர் பங்கேற்காத நிலையில், இரு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி மோசமாகத் தோற்றது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி இன்றைய போட்டியில் இல்லை என்று தெரிந்தவுடனே எங்களுக்கு மிகுந்த உற்சாகமாகவும், ஊக்கமாகவும் இருந்தது. ஏனென்றால், அவர் அணியில் இருக்கும் வரை, அந்த அணியை வெல்வது மிகக்கடினம். அணியின் வெற்றிக்காக அதிகபட்சமாகப் போராடக்கூடியவர். அதேசமயம் தோனி இல்லாத சூழலில் சிஎஸ்கே அணியை சேஸிங் செய்வது அவர்களுக்கு மிகக் கடினமாக இருக்கும்.

நான் உறுதியாகக் கூறுவேன். தோனி இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே அணி அதிகமாக வெளிக்காட்டுகிறது, வெளிப்படுத்துகிறது. பாவம் அவரால் என்ன செய்யமுடியும். உடல்நலக் குறைவு என்பது அவர் கையில் இல்லையே.

நாங்கள் டாஸ் வெல்லாமல் இருந்தது எங்களுக்கு கடவுளின் ஆசிபோல் அமைந்தது. சிஎஸ்கே அணியே தாமாக முன்வந்து சேஸிங் செய்ய வந்தார்கள். நாங்கள் நல்லவிதமான கிரிக்கெட்டைத் தான் விளையாட வந்தோம்.  சேப்பாக்கம் போன்ற மெதுவான ஆடுகளத்தில் சேஸிங் செய்வது கடினம் எனத் தெரிந்துகொண்டு, அவர்கள் தேர்வு செய்தது வியப்பாக இருக்கிறது.

நான் இந்தப் போட்டியில் அரை சதம் அடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமாக 30, 40 ரன்கள் மட்டுமே அடித்து வந்த நிலையில், முதல் முறையாக இந்த சீசனில் அரை சதம் அடித்தேன். எந்த சூழலிலும் நான் என்னுடைய பேட்டிங் ஃபார்ம் குறித்து கவலைப்பட்டதில்லை. ஏனென்றால், பந்தை எதிர்கொண்டு என்னால் துணிச்சலாக விளையாட முடியும். எனக்குத் தெரியும் என்னுடைய நாள் வரும் என்று.  அந்த நாள் இன்று வந்தது. அரை சதம் அடித்தேன்".

 இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார். 

சிஎஸ்கே அணியின் தற்காலிக கேப்டன் சுரேஷ் ரெய்னா கூறுகையில், "நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. 2 முதல் 3 ஓவர்களுக்கு ஒருமுறை சராசரியாக விக்கெட்டை இழந்து வந்தோம். இந்த சீசனில் எங்களின் பந்துவீச்சு திருப்திகரமாக இருக்கிறது. 155 ரன்கள் சேஸிங் செய்யக்கூடியதுதான் என்றாலும், பவர்-ப்ளேயில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். 10 ஓவர்களுக்கு மேலும் விக்கெட்டுகளை இழந்து தவறு செய்தோம்.

அதுமட்டுமல்லாமல் பேட்ஸ்மேன்கள், ஸ்டிரைக்கிங்கை மாற்றிக்கொள்ளாதது விக்கெட் நிலைக்காமல் இருந்ததற்குக் காரணம். எங்களின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அமர்ந்து என்ன தவறு செய்தோம் எனப் பேசி தீர்வு காண வேண்டும். எங்களின் பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அனுபவம்வாய்ந்த பேட்ஸ்மேன்கள இருக்கிறார்கள். ஆனால், பேட்ஸ்மேன்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது அவ்வளவுதான்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in