தோற்றாலும் சாதனைதான்: ஐபிஎல் போட்டியில் இரு மைல்கல்லை எட்டிய தோனி

தோற்றாலும் சாதனைதான்: ஐபிஎல் போட்டியில் இரு மைல்கல்லை எட்டிய தோனி
Updated on
2 min read

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோற்றபோதிலும் அந்த அணியின் கேப்டன் தோனி இரட்டை சாதனைகளை செய்துள்ளார்.

அந்த இரு சாதனைகளையும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் தோனி படைத்தார்.

பெங்களூரில் நேற்று ஐபிஎல் டி20 போட்டியின் 39-வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள் என 24 ரன்களை தோனி சேர்த்தார். ஆனால், கடைசிப்பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரன் அவுட் ஆகினார் தாக்கூர். ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது, இறுதிவரை ஆட்டமிழக்காமல் தோனி 48 பந்துகளுக்கு 84 ரன்கல் சேர்த்தார் இதில் 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த போட்டியில் 7 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் எனும் பெருமையைப் பெற்றார் தோனி.

இந்திய பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் அடித்தவகையில், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா இருவரும் 190 சிக்ஸர்கள் அடித்து ஒரேநிலையிலும், அடுத்தார்போல் 186 சிக்ஸர்கள் அடித்து ஆர்சிபிகேப்டன்  கோலியும் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக அதிக சிக்ஸர்கள் அடித்தபட்டியலில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 323 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்திலும், ஆர்சிபி வீரர் டிவில்லியர்ஸ் 204 சிக்ஸர்கள் அடித்து 2-வது இடத்திலும் உள்ளனர். டிவில்லியர்ஸ் சாதனையை முறியடிக்க தோனிக்கு இன்னும் ஒரு சிக்ஸர் மட்டுமே தேவைப்படுகிறது, இந்த சீசனுக்குள் தோனி அதை முறியடித்து ஒட்டுமொத்தமாக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் 2-வது இடத்தை பெறவும் வாய்ப்புண்டு.

இரண்டாவது சாதனையாக ஐபிஎல் போட்டியில் ஒரு அணிக்கு கேப்டனாக இருந்துகொண்டு தோனி  4 ஆயிரம்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்றார். ஏற்கனவே தோனி ஐபிஎல் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டிவி்ட்டார் என்கிற போதிலும், ஐபிஎல் போட்டியில் கேப்டனாக இந்த சாதனையைச் செய்யும் முதல் வீரர் தோனிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வேறு எந்த அணியின் கேப்டனும் மிகப்பெரிய ரன்களை எட்டவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in