Last Updated : 13 Apr, 2019 08:10 AM

 

Published : 13 Apr 2019 08:10 AM
Last Updated : 13 Apr 2019 08:10 AM

தவண் தாண்டவம்: 4-வது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ்: தினேஷ் தலைமைக்கு 2-வது தோல்வி

ஷிகர் தவணின் பவுண்டரி மழை, ரிஷப் பந்தின் நிதான ஆட்டம் ஆகியவற்றால், கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

இந்த வெற்றி மூலம் 7 போட்டிகளில் 3 தோல்வி 4 வெற்றி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் முன்னேறியுள்ளது. கடந்த 11 ஐபிஎல் சீசன்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி லீக் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டுவருவது இதுதான் முதல் முறையாகும்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. 179 ரன்கள் சேர்்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண், ரிஷப் பந்த் மட்டுமே. இருவரும் 3-வது விக்கெட்டுக்கு நிலைத்து ஆடி, 105 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வழிகாட்டினர்.

ஷிகர் தவண் 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள் உள்பட 63 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வெற்றார். 19-வது ஓவரில் இங்ராம் இரு வின்னிங் ஷாட்களை அடித்ததால், தவணால், முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. அதேசமயம், ஐபிஎல் சீசனில் 2-வது அரைசதத்தையும், ஐபிஎல் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் தவண் பதிவு செய்தார். அதோடுமட்டும்லலாமல், இந்த போட்டியில் தவண் அரைசதம் அடித்தது, டி20 போட்டிகளில் தவணின் 50-வது அரைசதமாக் என்பது குறிப்பிடத்தக்கது

அதேசமயம் தவணுக்கு ஈடுகொடுத்து ஆடிய ரிஷப்பந்த் 4 ரன்னில் அரை சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். வரும் 15-ம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட பிரகாசமான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா அதிரடியாக 2 சிக்ஸர்களுடன் வெளியேறினார், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் நடையைக் கட்டினார். இதுவரை 7 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் கூட ஸ்ரேயாஸ் அய்யர் சொல்லிக்கொள்ளும் வகையில் ஸ்கோர் செய்யவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பொறுத்தவரை வழக்கமான தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன், லின் இல்லாமல் களமிறங்கியது பலவீனமாக அமைந்தது. வெற்றி நெருக்கடி காரணமாக தினேஷ் கார்த்திக் கடந்த சில போட்டிகளாக நிதானத்தை இழந்து விரைவாக ஆட்டமிழந்து வருவது இந்த போட்டியிலும் தொடர்ந்தது. கொல்கத்தா அணி தொடர்ந்து 2 தோல்விகளைச் சந்தித்துள்ளது. நாளை பெரும்வலிமை படைத்த சிஎஸ்கே அணியுடனான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வென்றால் மட்டுமே 2-ம் இடத்தை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

179 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது. தவண், பிரித்வி ஷா ஆட்டத்தைத் தொடங்கினார். பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஓவரில் தவண் நிதானம் காட்ட, பெர்குஷனின் 2-வது ஓவரில் பிரித்விஷா 2 சிக்ஸர்களை விளாசினார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய 3-வது ஓவரில் தவண் வெடித்துக் கிளம்பி 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில் பிரித்விஷா அடித்த பந்தை தினேஷ் கார்த்திக் அருமையாக அந்தரத்தில் தாவி கேட்பிடித்தார். யாருமே எதிர்பாராத கேட்சாக இது அமைந்தது. பிரித்விஷா துரதிர்ஷ்டமாக 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். ரஸல் வீசிய 4-வது ஓவரில் தவண் ஹாட்ரி்ஸ் பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். பெர்குஷன் வீசிய 5-வது ஓவரில் மீண்டும் தவண் ஒருபவுண்டரி அடித்தார், அய்யர் தன் பங்கிற்கு பவுண்டரி விளாசினார்.

ரஸல் வீசிய 6-வது ஓவரின் கடைசிப்பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அய்யர் 6 ரன்னில் வெளியேறினார். பவர்ப்ளே ஓவரில் ெடல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் சேர்த்த்தது.

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கிய தவணுடன் இணைந்தார். இருவரின் ஆட்டம் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. பிராத்வெய்ட் வீசிய 10-வது ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி 32 பந்துகளில் அரைசதத்தை எட்டினார் தவண்.

குல்தீப் வீசிய 11-வது ஓவரில் பந்த் சிக்ஸரும், பெர்குஷன் வீசிய 13-வது ஓவரில் தவண், இரு பவுண்டரிகளையும் விரட்டினர். சாவ்லா வீசிய 14-வது ஓவரில் பந்த் 2 பவுண்டரிகளை தள்ளி ரன் ரேட்டை விரைவுப்படுத்தினார். இருவரும் ஓவருக்கு இரு பவுண்டரிகளை விளாசி ரன்ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர். ரஸல் வீசிய 17-வது ஓவரில் பந்த் ஒரு சிக்ஸர், பவுண்டரி நொறுக்கினார்.

ராணா வீசிய 18-வது ஓவரில் முதல் பந்தில் லாங் ஆன் திசையில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து பந்த் 46ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து இங்ராம் களமிறங்கினார். 2 ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸர், பவுண்டரியை இங்ராம் விளாசி அணியை வெற்றி பெறவைத்தார். 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. தவண் 97 ரன்களிலும், இங்ராம் 14 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கொல்கத்தா விக்கெட் சரிவு

முன்னதாக, கொல்கத்தா நைட்ர் ரைடர்ஸ் அணி முதலில் பேட் செய்தது. சுப்மான் கில், டென்லி ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஐபிஎல் போட்டியில் அறிமுகமான டென்லி முதல்பந்திலேயே ஸ்ெடம்ப் தெறிக்க இசாந்த் சர்மா பந்துவீச்சில் டக்அவுட்டில் நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த உத்தப்பா, கில்லுடன் இணைந்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். ரபாடா வீசிய 4-வது ஓவரில் உத்தப்பா 3 பவுண்டரிகளை விளாசினார். இசாந்த் சர்மா வீசிய 5-வது ஓவரில் கில் 2 பவுண்டிகள் அடித்தார். கீமோ பால் வீசிய 7-வது ஓவரில் உத்தப்பா, கில் இருவரும் இணைந்து 17 ரன்கள் சேர்த்தனர். பவர்ப்ளேயில் கொல்கத்தா அணி 41 ரன்கள் சேர்த்தது.

நிதானமாக ஆடி வந்த உத்தப்பா, 28 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா வேகத்தில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். அடுத்து வந்த ராணாவுடம் நிலைக்காமல் 11 ரன்களில் மோரிஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு ரஸல் களமிறங்கினார். நிதானமாக ஆடிய சுப்மான் கில் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் போட்டியில் 2-வது அரைசதமாகும்.

படேல்வீசிய 14-வதுஓவரில் ரஸல் பவுண்டரியும், கில் ஒருசிக்ஸரும், பவுண்டரியும் விளாசினர். கிமோ பால் வீசிய 15வது ஓவரில் படேலிடம் கேட்ச் கொடுத்து கில் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் அடங்கும்.

அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திஸ் வந்த வேகத்தில் ரபாடாவின் 16-வது ஓவரில் முதல்பந்தில் தவணிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த பிராத்வெய்ட், ரஸலுக்கு ஈடுகொடுத்தார். ரஸல் தனது வழக்கமான அதிரடியில் இறங்கினார். அதே ஓவரில் ரஸல் ஒருபவுண்டரி, சிக்ஸர் விளாசினார்.

ரபாடா வீசிய 18-வது ஓவரில் ரஸல் மீண்டும் இரு சிக்ஸர்களை அடித்து நொறுக்கினார். மோரீஸ் வீசிய 19-வது ஓவரில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் ரஸல் ஆட்டமிழந்தார். இதில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்.

கீமோ பால் வீசிய 19-வது ஓவரில் பிராத்வெய்ட் 6 ரன்கள் சேர்த்த நிலையில், திவேசியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சாவ்லா 14 ரன்களிலும், குல்தீப் 2 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. டெல்லி தரப்பில் பால், ரபாடா, மோரிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x