Published : 01 Apr 2019 04:43 PM
Last Updated : 01 Apr 2019 04:43 PM

ஐபிஎல் 2019: 3 போட்டிகளில் 55 ரன்கள்; 30-வது இடத்தில் விராட் கோலி

ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி மிகவும் சாதாரணமாகத் தெரிவதன் காரணம், அவர் மனம் முழுதும் உலகக்கோப்பையே நிறைந்துள்ளது என்று  அவர் மீது ஒரு இரக்கம் கலந்த விமர்சனம் இருந்து வருகிறது.

 

இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது அணி முதல் போட்டியில் 70 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 46 ரன்களை எடுத்தார், அந்தப் போட்டியில் நடுவரின் நோ-பால் பராமுகத்தினால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தது ஆர்சிபி.

 

இவரது அணியின் 360 டிகிரி அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் அன்று தன் பாணி ஆட்டத்தில் 70 ரன்களை எடுத்து இதுவரையிலான நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் வீரர் பட்டியலில் மொத்தம் 80 ரன்களுடன் 19வது இடத்தில் உள்ளார்.

 

ஆனால் விராட் கோலி 3 போட்டிகளில் 55 ரன்கள் என்று அட்டவணையில் கீழே 30வது இடம் பிடித்துள்ளார். விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டும் 101 என்று அவ்வளவு பிரகாசமாக இல்லை.  உலகக்கோப்பையை மனதில் கொண்டு ஆடி, இருக்கும் பார்மையும் தன்னம்பிக்கையையும் விராட் கோலி இந்த ஐபிஎல் சொந்த பார்ம் தோல்வி மூலமும் தன் அணியின் தோல்வி மூலமும் இழந்து விடப்போகிறார் என்ற கவலை இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுவதில் நியாயமுள்ளது.

 

இன்னொரு வீரர் தினேஷ் கார்த்திக் 3 போட்டிகளில் 54 ரன்கள் என்று 31வது இடத்தில் இருந்தாலும் ஒரு அரைசதம் அடித்து பார்முக்கு வந்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 128 என்பது ஆரோக்கியமானது.  ஆனால் விராட் கோலி தொடக்கத்தில் களமிறங்கி இன்னமும் சோபிக்காமல் போவதோடு சொந்த பார்முக்கும் திணறுகிறார், அணியையும் திணறடிக்கிறார். கேப்டன்சி தரம் மோசமாக உள்ளது, பேட்டிங் எடுக்க வேண்டிய பிட்சில் பவுலிங் எடுத்து தோல்வி தழுவிகிறார். பேர்ஸ்டோ, வார்னர் அன்று காட்டு காட்டென்று காட்டும் போது விராட் கோலியிடம் எந்த யோசனையும் இல்லாமல் வறண்டு போனது.

 

உலகக்கோப்பையை மனதில் கொண்டு இருக்கலாம், ஆனால் இந்தத்தொடரை சீரியசாக எடுத்துக் கொண்டு தன் பேட்டிங் பார்மையும், கேப்டன்சியில் இன்னும் நுணுக்கங்களையும் அவர் கற்றுக் கொள்ளலாமே. அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் கள கோணங்கித் தனங்களிலும் நாடகியத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.  ஏற்கெனவே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா உட்பட, ஷமி, புவனேஷ்வர் குமார், சாஹல் என்று அடி வாங்கி வருகின்றனர், இந்நிலையில் பேட்டிங்கில் விராட் கோலி என்ற தூண் உலகக்கோப்பைக்கு முன்னதாக தொடர்ச்சியாக சொதப்பலாக ஆடி, அணியின் தோல்வி மூலம் கடும் கிண்டலுக்கு ஆளாகி வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.

 

உலகக்கோப்பைக்கு முழு பார்முடனும் உற்சாகத்துடனும் ஆக்ரோஷத்துடனும் கூடிய விராட் கோலி தேவை, இதில் மாற்றமில்லை, நேற்று எம்.எஸ்.தோனி 3 விக்கெட்டுகள் விழுந்து நெருக்கடியில் இறங்கி காத்திருந்து பிறகு வெளுத்துக் கட்டி 46 பந்துகளில் 75 ரன்கள் அடித்து தன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றதை கோலி சீரியஸாக எடுத்துக் கொண்டு அவதானிக்க வேண்டும், தோனியும் தான் உலகக்கோப்பை ஆடப்போகிறார்.. தோனியின் கிரிக்கெட் தத்துவம் எளிமையானது, சூழ்நிலையை முதலில் அனுமதித்து அதனை மெதுவே அணுகி வென்றெடுப்பது, நிதானம், விவேகம் பிறகு வாய்ப்பு கிடைக்கு போது ஆக்ரோஷம் என்ற பாதையை கோலி தோனியின் பக்கங்களிலிருந்து உருவிக் கொள்ள வேண்டும்.

 

ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகிய அனுபவ வீரர்கள் முதல் 2 இடங்களில் இருக்கின்றனர், , சஞ்சு சாம்சன், கிறிஸ் கெய்ல், நிதிஷ் ராணா, பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ராபின் உத்தப்பா, ரிஷப் பந்த் ஆகியோர் முதல் 10 இடங்களில் இதுவரை உள்ளனர், இதில் இந்திய கேப்டன் முதலிடத்தில் இந்நேரம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் இடம்பெறவில்லை என்பதே இப்போதைய கவலை.

 

இன்னும் 11 போட்டிகளை விராட் கோலி ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸுக்காகவும் உலகக்கோப்பையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய அணிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்பதே ‘கிங் கோலி’ யின் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x