

நடுவர் தீர்ப்பை எதிர்த்து தோனி ஆடுகளத்துக்குள் தான் ஆட்டமிழந்த பிறகு புகுந்தது தவறு என்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர்.
பென் ஸ்டோக்ஸ் ஒரு இடுப்புயர ஃபுல்டாஸை கடைசி ஓவரில் மிட்செல் சாண்ட்னருக்கு வீச நடுவர் உல்ஹாஸ் காந்தி உடனே நோ-பால் அளிக்க, ஸ்கொயர் லெக் நடுவர் புரூஸ் ஆக்சன்போர்ட் அந்தத் தீர்ப்பை இல்லை என்று மாற்று தீர்ப்பளித்தார்.
இந்தக் குழப்பம் தீராத நிலையில் தோனி களம் புகுந்தார், இவர் இதற்கு முதல் பந்துதான் ஸ்டோக்ஸின் யார்க்கரில் ஆட்டமிழந்திருந்தார்.
தோனி களம் புகுந்து நடுவர்களிடம் வாக்குவாதம் புரிந்தது சிக்கலாக தோனிக்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது
இந்நிலையில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் கூறியதாவது:
தோனி களம் புகுந்தது சரியான செயலா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு போட்டியிலும் டென்ஷன் அதிகரிக்கிறது ஆகவே ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பதில் இருவேறு கருத்தில்லை.
ஆம்! இது ஆட்டத்தின் முக்கியமான தருணம் (நோ-பால்) ஆனால் பிட்சிற்குள் கேப்டன் புகுவது சரியா? இல்லை, சரியில்லை என்றே நான் கருதுகிறேன். நிச்சயம் இது சர்ச்சைக்குரியதுதான், நடுவர்கள் இது குறித்து முடிவு எடுத்துள்ளனர், ஆனால் நான் எல்லைக்கோட்டருகே இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இவ்வாறு கூறினார் ஜோஸ் பட்லர்.