

லண்டனில் 2017-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி தோற்க முக்கியக் காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான்அணியில் இடம் பெறாதது கேள்விக்குறியதாகி இருக்கிறது.
பந்துவீச்சில் மேட்ச் வின்னர் என்று சொல்லப்படும் முகமது அமிர், பல்வேறு போட்டிகளில் பாகிஸ்தானுக்கு தனது பந்துவீச்ச மூலம் வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். ஆனால், அவரைக் உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்யாமல், உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்துடன் ஒருநாள் தொடருக்கு மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை முதல் 6 ஓவர்களுக்குள் சீர்குலைத்து வெற்றியை எளிமையாக்கியவர் முகமது அமிர் என்பது அனைவருக்கும் நினைவிருக்கும்.
இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் சேர்த்தது. 339 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அமிர் தனது வேகப்பந்துவீச்சில் அதிர்ச்சி அளித்தார். ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் வந்த பேட்ஸ்மேன்களும் சொதப்பியதால் இந்திய அணி 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்து கோப்பையை பறிகொடுத்தது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்த முகமது அமிர் அதன்பின் சர்வதேச போட்டிகளில் மிகவும் பிரபலமானார். இவரின் பந்துவீச்சு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியது. இதனால் அணியில் தவிர்க்க முடியாத வீரராக அமிர் மாறினார்.
ஆனால், கடந்த 14 ஒருநாள் போட்டிகளாக அமிரின் பந்துவீச்சு மிகவும் மோசமடைந்து, விக்கெட் வீழ்த்தும் திறன் கேள்விக்குறியானது. கடைசியாக தான் பங்கேற்ற 14 போட்டிகளில் 100 ஓவர்கள் வீசி, 463 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ள முகமது அமிர் வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
இதில் 11 மெய்டன்கள் அடங்கும், ஓவருக்கு சராசரியாக 4.58 ரன்கள் வழங்கியுள்ளார். முகமது அமிரின் விக்கெட் வீழ்த்தும் திறன் மங்கிவருவதால், அவர் உலகக் கோப்பைக்கான் 15 பேர் கொண்ட அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
உலக கிரிக்கெட் அணிகளிலேயே மிகவும் மோசமான பந்துவீச்சு என்று இங்கிலாந்தின் மார்க் வுட் பந்துவீச்சை குறிப்பிடபப்டுகிறது, அவரின் சராசரி 47.75 ஆகும். அவருக்குஅடுத்தார்போல், இப்போது அமிர் கருதப்படுகிறார்.
ஆனால், பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர்களில் பெரும் ரசிகர் கூட்டம் முகமது அமிருக்கு உண்டு. உலகக் கோப்பைக்கான அணியில் முகமது அமிர் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முகமது அமிரின் விக்கெட் வீழ்த்தும் திறன்தான் மங்கிவிட்டதேத் தவிர, அவரின் ஓவர் எக்கானமிரேட் அதிகரிக்காமல் 4.58 என்ற ரீதியில் வைத்துள்ளார், டெத் ஓவர்களில் பந்துகளை அதிகமாக ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர் என்பதால், அவரை கழற்றிவிட மனம் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
உலகக் கோபைப்பான முகமது அமிரின் கனவு நிச்சயம் முடிந்துவிடவில்லை. இங்கிலாந்துக்கான 17 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ள அமிர்அங்கு சிறப்பாக பந்துவீசும்பட்சத்தில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற முடியும்.
மே 23-ம் தேதிவரை ஐசிசியின் அனுமதி பெறாமல் எந்த அணியும் தாங்கள் தேர்வு செய்துள்ள வீரர்களின் பட்டியலை மாற்றி அமைக்க முடியும். ஆதலால், முகமது அமிரின் உலகக் கோப்பைப் கனவு இன்னும் முடிந்துவிடவில்லை.
ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முகமது அமிர் சிறப்பாக பந்துவீசி உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் பட்சத்தில், முகமது அமிரின் பந்துவீச்சு அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்னமாக இருக்கும்.