Published : 16 Apr 2019 07:44 AM
Last Updated : 16 Apr 2019 07:44 AM

ஆர்சிபி பந்து வீச்சை அடித்து நொறுக்கி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி: கோலி படைக்கு 7வது தோல்வி

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 31வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோலி தலைமை ஆர்சிபி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3ம் இடம் வகிக்கிறது.

 

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி ஏ.பி.டிவில்லியர்ஸ் (75), மொயின் அலி (50) ஆகியோரது அற்புத பேட்டிங்கினால் 171 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற ரன் எண்ணிக்கையை எட்டியது. தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 172/5 என்று வெற்றி பெற்று ஆர்சிபிக்கு 7வது உதை கொடுத்தது.

 

10-ம் வாய்பாடு நடத்திய மும்பை இந்தியன்ஸ்:

 

இலக்கை விரட்டும் போது தொடக்க ஓவர்களில் உமேஷ் யாதவ். நவ்தீப் சைனி சரியாக வீசாமல் டி காக், ரோஹித் சர்மா 10-ம் வாய்ப்பாடு நடத்தினர். முதல் ஓவரிலேயே டி காக், உமேஷ் யாதவ்வை 2 பவுண்டரிகள் விளாச, அடுத்த நவ்தீப் சைனி ஓவரில் ரோஹித் சர்மா தன் முதல் ஷாட்டையே சைனியை ஃபைன் லெக் மேல் சிக்சருக்குத் தூக்கினார்.  முதல் 2 ஓவர்களில் 20 ரன்கள்.

 

அடுத்த ஓவரில் உமேஷ் யாதவ்வை மீண்டும் குவிண்டன் டி காக்,  முதல் பந்தை மிக அருமையாக கவர் திசையில் பவுண்டரி விளாச அடுத்து ஒரு எட்ஜ் பவுண்டரி, பிறகு ஒரு பந்து ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் என்று சொன்னார்கள் ஆனால் பந்து காணாமல் போனது. 16 ரன்கள். உமேஷ் 2 ஓவர்கள் 25 ரன்கள். அதன் பிறகு விராட் கோலி, ‘போதும்டா சாமி’ என்று உமேஷை கொண்டு வரவேயில்லை.

 

இன்னொரு முனையில் 10ம் வாய்பாடை நிறுத்தும் எண்ணத்துடன் மொகமது சிராஜைக் கொண்டு வந்தார் ஆனால் 10-ம் வாய்பாடை நிறுத்த முடியவில்லை, ரோஹித் சர்மா பாயிண்டில் ஒரு சிக்ஸ் பிறகு ஒரு பவுண்டரி.  ஒன்று புல் லெந்த் அல்லது ஷார்ட் பிட்ச் இடைப்பட்ட பவுலிங் தெரியவில்லை. 4 ஓவர் 48 ரன்கள் என்று 12ம் வாய்பாடாக மாறவே கோலி, சாஹலைக் கொண்டு வந்தார். டி காக் ஒரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரில் 6 ரன்களே வந்தது. ஆனால் மீண்டும் நவ்தீப் சைனியை இன்னொரு முனையில் கொண்டு வர ரோஹித் சர்மா 1 நான்கையும் டி காக் ஒரு ஆறையும் அடித்தனர். 6 ஓவர்கள் 67/0.

 

மொயின் அலி ஒரே ஒவரில் 2 விக்கெட்:

 

7வது ஓவரில் பரிதாப பவன் நெகி அழைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு பார்த்திவ் படேல் ஒரு கேட்சை விட்டார், குவிண்டன் டி காக் தப்பினார். விராட் கோலி உப்பு விற்கப் போனால் மழையும் மாவு விற்கப் போனால் காற்றும் அடித்து அவரது துரதிர்ஷ்டம் தொடர்ந்தது. பவன் நெகி 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார். 7 ஓவர்களில் 70 என்று மும்பை ஆடிவந்த நிலையில் மொயின் அலியைக் கொண்டு வந்தார் கோலி. ஒரு பந்து ஆஃப் ஸ்ட்ம்புக்கு வெளியே பிட்ச் ஆகித் திரும்ப கட் ஆட முயன்று பவுல்டு ஆனார் ரோஹித். இவர் 19 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 28 ரன்களில் வெளியேறினார்.

 

 

குவிண்டன் டி காக் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 26 பந்துகளில் 40 ரன்களுடன் அதே ஓவரில் எல்.பி.ஆனார். மொயின் அலி பேட்டிங்கைப்போலவே பவுலிங்கிலும் ஆர்சிபி-யை ஆட்டத்துக்குள் கொண்டு வந்தார். டி காக் முன்னால் வந்து ஆடியிருக்க வேண்டும், தவறினார்.

 

ஆனால் ஆட்டத்தின் 10-ம் வாய்பாடு டெம்ப்போவை இஷான் கிஷன் தக்க வைத்தார். அவர் அடுத்த பவன் நெகி ஓவரில் அடுத்தடுத்து நேராகவும் லாங் ஆனிலும் 2 சிக்சர்களை விளாசினார். சூரிய குமார் யாதவ், மொயின் அலி பந்து நன்றாகத் திரும்பிய நிலையிலும் ஸ்பின் ஆகும் திசைக்கு எதிர்த்திசையில் ஒரு சிக்சர் அடிக்க 10 ஓவர்களில் 97/2 என்று இருந்தது மும்பை இந்தியன்ஸ்.

 

அடுத்த சாஹல் ஓவரில் மீண்டும் மேலேறி வந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ் அடித்த இஷான் கிஷன். ஆனால் மீண்டும் இறங்கி வர சாஹல் பந்தை சற்றே தள்ளி வீச பீட் ஆகி ஸ்டம்ப்டு ஆனார், ஆனால் 9 பந்துகளில் 21 மிக முக்கியமான சிறு அதிரடி இன்னிங்ஸ் ஆகும்.

 

இந்த 10.3 ஓவரில் ஸ்கோர்  103/2 என்று இருந்தது, இதே சாஹல் ஓவரின் கடைசி பந்தை குருணால் பாண்டியா பவுண்டரிக்கு விரட்ட 11 ஓவர்களில் 108/3. அதன் பிறகு மொயின் அலி 2 ரன்களையே கொடுத்து ஒரு ஓவரை முடிக்க, 5 ஒவர்களில் வெறும் 23 ரன்களே வந்தது, மும்பை இந்தியன்ஸ் கட்டுப்படுத்தப்பட்டது.  இதில் சூரிய குமார் யாதவ்வும் 23 பந்துகளில் 29 ரன்கள் என்று சிறு அதிரடி இன்னிங்சை ஆடி சாஹலிடம் அவுட் ஆனார்.

 

3 ஓவர்கள் 25 ரன்கள் என்று இருந்த பவன் நெகியை அப்போதே முடித்திருக்க வேண்டும் கோலி ஆனால் அவரைப் போய் கடைசியில் மீதம் வைத்து பெரும் தவறிழைத்தார் விராட் கோலி.

 

ஹர்திக் பாண்டியா அதிரடி பினிஷிங்:

 

16 ஓவர்களில் 131/4 என்ற நிலையில் 4 ஒவர் 41 ரன்கள் என்று சமன்பாடு கொஞ்சம் ஆர்சிபிக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் நவ்தீப் சைனையை விராட் கோலி கொண்டு வர ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரிகளை விளாசினார், பிறகு சிராஜையும் ஒரு பவுண்டரி விளாசினார், ஆனால் குருணால் பாண்டியா 11 ரன்களில் சிராஜிடம் வெளியேறினார். 18 ஓவர்கள் முடிவில் 150/5. 2 ஓவர்களி 22 ரன்கள் தேவை என்ற நிலையில் உமேஷ் யாதவ்வை முயன்றிருக்கலாம் ஆனால் பவன் நெகியை அங்கு தவறாகக் கொண்டு வந்தார் விராட் கோலி.

 

 

ஹர்திக் 6,4,4,6 என்று நெகிக்கு சாத்துமுறை நடத்தினார். வைடு லாங் ஆனில் ஹர்திக் சிக்ஸ் விளாச அதுவே வெற்றி ரன்களக அமைந்தது. ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் நாட் அவுட்.  சாஹல், மொயின் அலி தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை மும்பை வெற்றி.

 

மலிங்கா தர்பார்; மொயின் அலி, டிவில்லியர்ஸ் அபாரம்:

 

ஐபிஎல் கிரிக்கெட்டில் மலிங்காவுக்கு சாத்துமுறை நடத்தும் பேட்ஸ்மென் உண்டு என்றால் அது டிவில்லியர்ஸ்தான். ஐபிஎல் கிரிக்கெட்டில் மலிங்காவை மட்டும் வெளுத்துக் கட்டியுள்ளார் டிவிலி. 59 பந்துகளில் 109 ரன்களை டிவில்லியர்ஸ் மலிங்கா பந்தில் விளாசியதாக கிரிக் இன்போ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. டிவில்லியர்ஸை இதுவரை மலிங்கா வீழ்த்தியதே இல்லை.

 

 

நேற்றும் மலிங்காவின் 8 பந்துகளில் 23 ரன்களை விளாசினார் டிவிலி. இதில் கிரீஸை அபாரமாகப் பயன்படுத்தி முன்னும் பின்னும், குறுக்கும் மறுக்குமாக நகர்ந்து நகர்ந்து 3 சிக்சர்களை தூக்கினார் டிவிலி.  மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ், 2 சிக்சர்கள் டீப் ஸ்கொயர் லெக் பவுண்டரியில் 10 ஒவர் வாக்கில் டிவில்லியர்ஸ் 22 பந்துகளி 20 ரன்கள் என்று இருந்தார்.  41 பந்துகளில் அரைசதம் கண்டார். 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து கெய்ரன் பொலார்டின் அருமையான டீப் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார்.

 

முன்னதாக பார்த்திவ் படேல் 28 ரன்களில் ஹர்திக் பாண்டியாவிடம் வெளியேற, விராட் கோலியை பெஹெண்டார்பின் பொறிவைத்து கச்சிதமான களவியூகம் பந்து வீச்சில் 8 ரன்களில் வெளியேற்றினார் ரோஹித் சர்மா. 49/2 என்ற நிலையிலிருந்து மொயின் அலி, டிவில்லியர்ஸ் ஸ்கோரை 144 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

 

மொயின் அலி 32 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 50 ரன்கள் விளாசினார்.  மும்பை லெக் ஸ்பின்னரின் பந்துகளை இருமுறை  சிக்சருக்கு அனுப்பிய மொயின் அலி பிறகு பெஹெண்டார்ப் வீசிய 16வது ஓவரில் ஒரு பவுண்டரி 2 சிக்சர்களை அடித்தார். மலிங்காவின் மெதுவான பந்தை டாப் எட்ஜ் செய்ய கேட்ச் ஆகி 50 ரன்களில் வெளியேறினார் மொயின் அலி.

 

டிவில்லியர்ஸ் மட்டுமே மலிங்காவை அடிக்க முடிந்தது, ஆனால் மலிங்கா 16 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே மற்ற பேட்ஸ்மென்களுக்குக் கொடுத்தார். 18வது ஓவரில் மொயின் அலி, ஸ்டாய்னிஸ் ஆகியோரை வெளியேற்றினார். 20வது ஒவரில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்களில் 31 ரன்கள் 4 விக்கெட் என்று அசத்தினார்.

 

பும்ரா, டிவில்லியர்ஸை தன் வேகம், பவுன்ஸ், யார்க்கர் மூலம் தொல்லை செய்தார், ஒரு பந்து எகிறி டிவில்லியர்ஸின் ஹெல்மெட்டைத் தாக்கியது.  அருமையான யார்க்கர் ஒன்று டிவில்லியர்ஸின் பரந்த கால்களுக்கு இடையில் கார்டு எடுக்கும் அடையாளத்தில் பிட்ச் ஆகிச்சென்றது.  பவர் ப்ளெயில் 2 நல்ல ஓவர்களை வீசிய பும்ரா, பிறகு 17, 19வது ஓவர்களை சிறப்பாக வீசி 4 ஓவர் 22 ரன்கள் என்று அசத்தினார். ஆர்சிபி 171/7 என்று முடிந்தது.

 

ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x