

இதே தினம் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை இந்திய அணி வீழ்த்தி 2வது 50 ஒவர் ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது. தோனி தனக்கேயுரிய பாணியில் சிக்சர் அடித்து மட்டையை வாள்வீரன் போல் சுழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தினம்.
நாடே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய அந்தத் தினம் இன்று சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ஜாகீர் கான் உள்ளிட்டோரால் நெகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனு நினைவு கூரப்பட்டுள்ளது.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பேசியிருப்பதாவது:
என் வாழ்நாளின் மிகப்பெரிய நாள், 8 ஆண்டுகள் கழிந்து விட்டது, அடுத்த உலகக்கோப்பை இப்போது நெருங்கிவிட்டது. அணி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் யார் அணியில் தேர்வானாலும் அது நம் அணி.
டீம் இந்தியாவின் சீருடையைக் கவனித்தால் பிசிசிஐ லோகோவுக்கு மேல் 3 நட்சத்திர அடையாளங்களிருக்கும், அது 3 உலகக்கோப்பையை வென்றதற்கான அடையாளம், இம்முறை வென்று 4 உலகக்கோப்பைகளாக்குவோம். உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு ஆதரவளிக்க என்னுடன் இணையுங்கள்.
இவ்வாறு கூறியுள்ளார்.
அதிரடி தொடக்க வீரர் விரேந்திர சேவாக், ‘என்னவொரு நாள், 2011 உலகக்கோப்பை. இதே தினம் 8 ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் கனவை வாழ்ந்தோம். நாடே கொண்டாடியது. நீங்கள் எப்படி கொண்டாடினீர்கள்?’ என்று பதிவிட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிக ரன் எடுத்தவர், அதிக விக்கெட் எடுத்தவர், தொடர் நாயகன் என்று முறையே சச்சின், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.