Published : 17 Apr 2019 08:49 AM
Last Updated : 17 Apr 2019 08:49 AM

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று மோதல்: பிளே ஆஃப் சுற்றில் கால்பதிக்கும் முனைப்பில் சிஎஸ்கே

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

தோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் 14 புள்ளிகள் குவித்து பட்டியலில் ஆதிக்கம் செலுத்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதை சென்னை உறுதி செய்யும்.

அதேவேளையில் தொடரை தோல்வியுடன் தொடங்கிய ஹைதராபாத் அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று அசத்தியது. இந்த வெற்றிகளுக்குப் பின்னர் அந்த அணி ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்து கடும் சரிவுகளை சந்தித்துள்ளது.

சொந்த மைதானத்தில் கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்த போதிலும் பேட்டிங்கில் கொத்து கொத்தாக விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த ஆட்டத்தில் 156 ரன்களை துரத்திய ஹைதராபாத் அணி 101 ரன்கள் வரை 2 விக்கெட்களை மட்டுமே இழந்திருந்த நிலையில் அடுத்த 15 ரன்களை சேர்ப்பதற்குள் எஞ்சிய 8 விக்கெட்களையும் தாரைவார்த்து தோல்வியை தேடிக்கொண்டது.

 ‘அப்பாக்களின் ஆர்மி’ என அழைக்கப்படும் சென்னை அணியின் பலமே சூழ்நிலைகளுக்கு தகுந்தபடி தகவமைத்துக் கொண்டு விளையாடுவதும், கேப்டன் தோனியின் சரியான திட்டமிடுதலும்தான். ஆடுகளத்துக்கு தகுந்தபடி தோனி அணித் தேர்வை அமைப்பது வெற்றிக்கு சிறந்த அடித்தளமாக அமைகிறது.

குறிப்பாக சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஹர்பஜன் சிங்கை பயன்படுத்தும் தோனி, வெளி மைதான ஆட்டங்களில் மிட்செல் சாண்ட்னரின் ஆல்ரவுண்டர் திறனை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். இந்த சீசனில் 13 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள 40 வயதான இம்ரன் தகிர், தோனியின் களவியூகங்களை நிறைவேற்றுவதில் அபாரமாக செயல்பட்டு வருகிறார்.

பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா கடந்த ஆட்டத்தில் அரை சதம் விளாசி பார்முக்கு திரும்பியிருப்பது அணியின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அம்பதி ராயுடுவின் பேட்டிங் மட்டுமே சற்று கவலை அளிக்கும் விதத்தில் உள்ளது. இந்த சீசனில் அவர், 8 ஆட்டங்களில் 19.71 சராசரியுடன் 138 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அம்பதி ராயுடுக்கு இடம் வழங்கப்படாத நிலையில் தற்போது சென்னை அணியில் 4-வது வீரராக களமிறங்கி வரும் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஹைதராபாத் அணி யானது டாப் ஆர்டர் பேட்டிங்கை மட்டுமே பிரதானமாக நம்பி உள்ளது. இந்த சீசனில் 400 ரன்கள் குவித்துள்ள டேவிட் வார்னர், 304 ரன்கள் சேர்த்துள்ள ஜானி பேர்ஸ்டோ  ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இவர்கள் சிறப்பாக செயல்பட தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த அணியும் ஆட்டம் காண்கிறது.

குறிப்பாக அணியின் நடுவரிசை பேட்டிங் பலம் இழந்து காணப்படுகிறது. டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவுக்கு பிறகு அந்த அணியில் ரன்கள் சேர்த்தவர்கள் என்று பார்த்தால் விஜய் சங்கர் தான் (132 ரன்கள்). மணீஷ் பாண்டே, தீபக் ஹூடா, யூசுப் பதான் ஆகியோர் தலா 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள நிலையில் முறையே 54, 47, 32 ரன்களே சேர்த்துள்ளனர். கடந்த கால சீசன்களில் மேட்ச் வின்னராக திகழ்ந்த யூசுப் பதானிடம் இருந்து பெரிய அளவிலான ஆட்டம் இதுவரை வெளிப்படவில்லை.  இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமானால் அணியின் நடுவரிசை பேட்டிங் வலுப்பெறுவது அவசியம்.

ஒட்டுமொத்தமாக  சென்னை அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட வேண்டுமென்றால் ஹைதராபாத் அணி பேட்டிங், பந்து வீச்சு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்துவது அவசியம்.

அணிகள் விவரம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்),மணீஷ் பாண்டே, மார்ட்டின் குப்தில்,ரிக்கி புயி, டேவிட் வார்னர், தீபக் ஹூடா, முகமது நபி, யூசுப் பதான்,ஷகிப் அல் ஹசன், அபிஷேக் சர்மா,விஜய் சங்கர், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி,ஜானி பேர்ஸ்டோ, விருத்திமான் சாஹா, சித்தார்த் கவுல், கலீல் அகமது, புவனேஸ்வர் குமார், ரஷித் கான்,பாசில் தம்பி, பில்லி ஸ்டான்லேக், டி.நடராஜன், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு,ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ்,முரளி விஜய், கேதார் ஜாதவ்,சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா,துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர்,ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா,கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன்,தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

நேரம்: இரவு 8

இடம்: ஹைதராபாத்

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x