

எனக்கு நீண்டநாட்களாக முதுகுவலி இருந்து வருகிறது, உலகக்கோப்பை வரும் நிலையில், முதுகுவலி வராமல் இருப்பது அவசியம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 போட்டியின் 41-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்குப் பின் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளேவுக்கு தோனி பேட்டி அளித்தார். அப்போது தோனியிடம் உடல் நிலை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தோனி கூறுகையில், "உலகக்கோப்பை வருகிறது. உடல் நிலையை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறை அதிகம் இருக்கிறது. அதிலும் எனக்கு ஏற்கெனவே முதுகுவலி இருப்பதால், அதை இன்னும் மோசமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை முதுகுவலி மோசமானால், நான் நிச்சயம் ஓய்வு எடுத்துக்கொள்வேன். ஆனால், இப்போது இருக்கும் நிலையில், சில போட்டிகளில் விளையாடலாம். முழுமையாக உடல்தகுதி பெறக் காத்திருந்தால் இரு போட்டிகளில் விளையாடுவதற்கு 5 ஆண்டுகள் ஆகிவிடும்" எனத் தெரிவித்தார்.
சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றி பெறவும், ப்ளே-ஆப் சுற்றுக்குச் செல்லவும் என்ன காரணம் என்ற கேள்விக்கு, தோனி பதில் அளிக்கையில், "நான் அந்த வெற்றியின் ரகசியம் என்னவென்று ஒவ்வொருவரிடம் தெரிவித்தால், அடுத்த ஆண்டு ஏலத்தில் என்னை யாரும் வாங்க முன்வரமாட்டார்கள். அது வர்த்தக ரகசியம்.
சென்னை ரசிகர்களின் ஆதரவு, அணி நிர்வாகத்தின் ஆதரவு முக்கியமானது. அணி சிறப்பாகச் செயல்பட உதவியாக இருக்கும். மற்ற பணியாளர்கள், ஊழியர்கள், அணியின் சூழல் நல்லவிதமாகச் செல்ல உதவியாக இருக்கும் அனைவரும் இதற்குப் பொறுப்பாளர்கள்.
இதைத் தவிர்த்து, ஓய்வு பெறும்வரை நான் எதையும் வெளியிடமாட்டேன். உலகக்கோப்பை வருவதால், உடல் நிலையில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன்" எனத் தெரிவித்தார்.