

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு தயாராகும் வகையில் ஐரோப்பாவுக்கு இன்று சுற்றுப்பயணம் செல்கிறது இந்திய ஹாக்கி அணி.
இந்த சுற்றுப்பயணத்தின்போது போட்டியை நடத்தும் நெதர்லாந்துடன் இரு போட்டி உள்பட மொத்தம் 5 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி. இதுதவிர நெதர்லாந்தில் உள்ள தேசிய கிளப்பு அணிகளுக்கு எதிராக இரு போட்டிகளிலும், பெல்ஜியத்துக்கு எதிராக ஒரு போட்டியிலும் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடர் ஏப்ரல் 19-ம் தேதி நிறைவடைகிறது.
இந்திய அணி உலகக் கோப்பை போட்டிக்காக தயாராகி வருவது குறித்துப் பேசிய பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ், “உலகக் கோப்பை போட்டி நெதர்லாந்தில் நடைபெறவுள்ளதால், இந்த ஐரோப்பிய சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும். மேலும் இது வீரர்கள், பயிற்சியாளர், உதவி அலுவலர்கள் என அனைவருக்கும் ஒரு மாதிரி உலகக் கோப்பை போட்டியாக அமையும். இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமானது என்னவென்றால் உலகக் கோப்பை போட்டியில் என்ன மாதிரியான டர்ப் பயன்படுத்தப்படுகிறதோ, அதே டர்ப்தான் இந்தப் போட்டியிலும் பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பயிற்சி முகாமில் எங்கள் வீரர்கள் முக்கியமான பகுதிகளில் சிறப்பாக ஆடுவதில் தீவிரக் கவனம் செலுத்தினர். ஐரோப்பிய பாணியில் முழுமையாக விளையாடுவதால் இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் அனுபவம் மிக முக்கியமானதாகும்” என்றார்.
21 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணிக்கு மிட்பீல்டர் சர்தார் சிங் கேப்டனாகவும், தடுப்பாட்டக்காரர் ரூபிந்தர் பால் சிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் மே 31 முதல் ஜூன் 15 வரை நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெறவுள்ளது.
அணி விவரம்: கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், ஹர்ஜாத் சிங்.
தடுப்பாட்டக்காரர்கள்: பைரேந்திர லகரா, ரூபிந்தர் பால் சிங், ரகுநாத், கோதாஜித் சிங், குரீந்தர் சிங், குர்பஜ் சிங்.
நடுகளம்: சர்தார் சிங், உத்தப்பா, தரம்வீர் சிங், மன்பிரீத் சிங், சிங்லென்சனா சிங், டேனிஸ் முஜ்தபா, தேவிந்தர் வால்மீகி.
முன்களம்: எஸ்.வி.சுநீல், நிகின் திம்மையா, ஆகாஷ்தீப் சிங், ராமன்தீப் சிங், யுவராஜ் வால்மீகி, லலித் உபாத்யாய்.