

இந்த ஹர்பஜன் சிங் சிஎஸ்கேவுக்கு வந்தாலும் வந்தார்... அவரது ‘பஞ்ச்’ டயலாக் ட்வீட்ட்கள் தொல்லை தாங்கல என்று சிலர் அங்கலாய்க்க, மேலும் பலர் ரசிக்க அவரது ட்வீட்கள் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
அவர் ‘தானா எழுதல மண்டபத்துல யாரோ எழுதிக் கொடுக்கறாங்க’ என்ற நக்கல்களும் ஒரு சில தரப்புகளில் பேசப்பட்டு வருகிறது.
நேற்று ஹர்பஜன் சிங்கை அணியில் எடுத்த போதே இது ஸ்பின் பிட்ச் என்பது புரிந்தது. சிஎஸ்கே அணி டுபிளெசிஸ் அதிரடி அரைசதம் மற்றும் தோனியின் கடைசி நேர அதிரடி 37 ரன்களினால் 160 ரன்களை எடுத்தது.
அப்போது அந்த ஸ்கோர் வெற்றி பெற போதுமா என்று சந்தேகம் எழுந்தது, ஏனெனில் கிங்ஸ் லெவனில் கெய்ல், ராகுல், டேவிட் மில்லர், சாம் கரன் போன்றவர்களுக்கு இந்த ஸ்கோர் பத்துமா என்று கேள்வி எழுந்தது.
ஆனால் தோனியின் களவியூக உதவியுடன் ஹர்பஜன் சிங், ‘வெய்ட்டிங் டைனமைட்’ கிறிஸ் கெய்லை வீழ்த்தினார். மிக அருமையாக செட் -அப் செய்தார் தோனி அந்த விக்கெட்டுக்காக, ஹர்பஜனும் அருமையாக ஒரு பந்தை கெய்லுக்குக் குறுக்காக ஸ்பின் செய்தார். கெய்ல் அவுட். இது மிக முக்கிய விக்கெட். மொத்தம் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
இந்நிலையில் தன் ‘பஞ்ச்’ ட்வீட் ஒன்றில் ஹர்பஜன் சிங், “நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான்.நான் என்ன நம்புனேன் அத தாண்டி என் நண்பன் @msdhoni @ChennaiIPL @CSKFansOfficial என்ன நம்புறாங்க அதுக்கு கைமாறா வெற்றி ஓரம்கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும் சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி #CSKvKXIP” என்று ட்வீட் செய்துள்ளார்.