

இந்த ஐபிஎல் தொடரில் இன்னமும் எதிர்ப்பார்ப்புக்கேற்ப சோபிக்காத ரோஹித் சர்மா, 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வைத்து 50 ஓவர் கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்.காம் என்ற இணையதள அறிமுக நிகழ்ச்சியில் நடந்த குழு விவாதத்தில் கெவின் பீட்டர்சன், பிரையன் லாரா, ரோஹித் சர்மா, மகேலா ஜெயவர்தனே, மகளிர் கிரிக்கெட்டின் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ரோஹித் சர்மா பேசும்போது, “உலகக்கோப்பை அணித்தேர்வுக்கு ஐபிஎல் போட்டிகள் அளவு கோலாக இருக்கக் கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் நிறைய சர்வதேச போட்டிகள் ஆடியுள்ளோம் அதுதான் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரம்.
50 ஒவர் கிரிக்கெட்டுக்கான அணியை 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வைத்துத் தேர்வு செய்ய முடியாது.
உலகக்கோப்பைக்கு நம் அணி ஏறக்குறைய செட்டில் ஆகிவிட்டது. ஒரு சில இடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். கேப்டன், கோச், தேர்வாளர்கள் இதனை முடிவு செய்வார்கள்” என்றார் ரோஹித் சர்மா.