

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் தொடங்க உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டது.
இதில் ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் ஆன்ட்ரூ ரஸல், கிறிஸ் கெயில் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேசமயம், சுனில் நரேன், கெய்ரன் பொலார்ட் ஆகியோருக்கு இடமில்லை.
எதிர்பார்க்கப்பட்டது போலவே, ஜேஸன் ஹோல்டர் அணிக்கு கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார். ஷிம்ரன் ஹெட்மயர், ஷானன் கேப்ரியல், கீமர் ரோச் என அனுபவமும், இளமையும் கலந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வுக்குழுவின் தலைவர் ராபர்ட் ஹேன்ஸ் கூறுகையில், " புதிய தேர்வுக்குழுவின் விதிமுறைகளின் அடிப்படையில் நாங்கள் வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். வழக்கமாக அணியில் இடம் பெறாவிட்டாலும் கூட அந்த வீரர்கள் திறமையாக மற்ற லீக் ஆட்டங்களில் விளையாடினாலும் அவர்களையும் அணியில் சேர்த்துள்ளோம். அணித் தேர்வு முழுமையும் அனுபவம், உடற்தகுதி, அணியின் சமநிலை, தற்போதுள்ள ஃபார்ம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்பவே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் சுனில் நரேன், அல்சாரி ஜோஸப் ஆகியோருக்கு விரலில் காயமும், தோள்பட்டை காயமும் இருப்பதால் அவர்கள் பரிசீலனைக்கு எடுக்கப்படவில்லை.
கெயில், ரஸலுக்கு ஆழ்ந்த அனுபவம் இருக்கிறது. கெயில் ஒரு மேட்ச் வின்னர், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் திறமை பெற்றவர். அதேபோல, நடுவரிசையில் பலத்தை அதிகரிக்க ரஸலைத் தேர்வு செய்தோம் " எனத் தெரிவித்தார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி விவரம்:
ஜேஸன் ஹோல்டர்(கேப்டன்),ஆன்ட்ரூ ரஸல், ஆஷ்லே நர்ஸ், கார்லோஸ் பிராத்வெய்ட், நிகோலஸ் பூரன், டேரன் பிராவோ, எவின் லூயிஸ்,ஃபேயின் ஆலன், கீமர் ரோச், ஓஸ்னே தாமஸ், ஷாய் ஹோப், ஷானன் கேப்ரியல், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரன் ஹெட்மயர், கிறிஸ் கெயில்