Last Updated : 10 Apr, 2019 04:20 PM

 

Published : 10 Apr 2019 04:20 PM
Last Updated : 10 Apr 2019 04:20 PM

விராட் கோலி ஹாட்ரிக்: விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராகத் தேர்வு

2019-ம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது ஆண்டாக விராட் கோலி விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்று வருகிறார். 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை பெற்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

இதுவரை 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை டான் பிராட்மேன்(10முறை), ஜேக் ஹாப்ஸ்(8 முறை) மட்டுமே வென்றுள்ளனர். இந்த இரு வீரர்களுக்குப்பின் கோலி இப்போது வென்றுள்ளார்.

விராட் கோலியோடு சேர்த்து மொத்த 5 சிறந்த வீரர்களைத் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தேர்வு செய்துள்ளது. அதில் விராட் கோலி தவிர்த்து, இங்கிலாந்து வீராங்கனை டாமே பியாமவுன்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரண், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விராட் கோலி தவிர்த்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி20 போட்டியில் சிறந்த வீரராக தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டில் விராட் கோலி, 2,735 ரன்களை டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டிகளில் சேர்த்துள்ளார். இதில் 37 இன்னிங்ஸ்களில் 11சதங்களை விராட் கோலி அடித்துள்ளார். இந்த 11 சதங்களில் 7 சதம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய வலிமையான அணிகளுக்கு எதிராக அந்த நாட்டு மண்ணில் கோலி அடித்ததாகும்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. ஆனால், கோலி, 5 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள் உள்பட 593 ரன்கள் குவித்தார்.

கோலி குறித்து விஸ்டன் ஆசிரியர் லாரன்ஸ் பூத் கூறுகையில், " கடந்த 1889ம் ஆண்டில் இருந்து பாரம்பரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து விஸ்டன் விருதுகளை வழங்கி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு விராட் கோலி வந்திருந்த போது 134 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அவரின் சராசரி 13.40 ஆக இருந்தது. ஆனால், கடந்த முறை அவர் 593 ரன்கள் சேர்த்து 59.30 ரன்கள் சராசரி வைத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x