Published : 27 Apr 2019 04:33 PM
Last Updated : 27 Apr 2019 04:33 PM

அஸ்வின்  செய்த ‘மன்கட்’ அவுட் சரியே:  ஆஸி. முன்னாள் ஐசிசி நடுவர் சைமன் டாஃபல் விளக்கம்

ஐபிஎல் கிரிக்கெட் 2019-ன் பிரதான சர்ச்சை அஸ்வின், ஜோஸ் பட்லர் விவகாரமான நிலையில், ஜோஸ் பட்லரை அஸ்வின் பவுலிங் போடாமலேயே மன்கட் முறையில் அவுட் செய்தது சரிதான் என்று முன்னாள் ஆஸ்திரேலிய, ஐசிசி நடுவர் சைமன் டாஃபல் தெரிவித்துள்ளார்.

 

ஐசிசி நடுவர்களில் இவர் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் சிறந்த நடுவர் என்ற பெயர் பெற்றவர், இவர் காலத்தில் வீரர்களின் உயரிய மதிப்பைப் பெற்ற நடுவராகத் திகழ்ந்தார் சைமன் டாஃபல்.

 

இந்நிலையில் அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்தில் எழுதிய பத்தி ஒன்றில் அஸ்வின் மன்கட் அவுட் பற்றியும் தோனி மைதானத்துக்குள் அத்துமீறி  புகுந்து நடுவர்களிடன் நோ-பாலுக்காக வாதிட்டது பற்றியும் தன் கருத்தை எழுதியுள்ளார்.

 

அஸ்வினின் பட்லர் மன்கட் அவுட் கிரிக்கெட் ஸ்பிரிட் பற்றியது அல்ல. நான் அந்த அவுட்டைப் பார்த்தேன், அது ஸ்பிரிடி ஆஃப் கிரிக்கெட் பற்றியது அல்ல.  விதிப்படி பவுலர் பந்தை வீசி முடிக்கும் வரை ரன்னர் முனையில் இருக்கும் வீரர் கிரீஸை விட்டுத் தாண்டக் கூடாது. ஆகவேதான் பவுலர் தன் ஆக்‌ஷனின் கடைசி கட்டத்துக்கு வந்தாலும் கூட ரன்னர் கிரீசுக்கு வெளியே இருந்தால் ரன் அவுட் செய்யலாம் என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

 

இப்படி ரன் அவுட் செய்கிறார்கள் என்று விதியை மாற்றியமைக்க முயன்றால் இதுவும் பேட்ஸ்மென்களுக்குச் சாதகமான அநீதியாகி விடும்.  இது குறித்த விதி 41.16 என்ன கூறுகிறது, அதன் நோக்கம் என்னவெனில் பந்து பவுலர் கையிலிருந்து ரிலீஸ் ஆகும் வரை ரன்னர் தன் கிரீசிற்குள் இருக்க வேண்டும் என்பதுதான். ரன்னர் இப்படி செய்யாமல் வெளியே செல்கிறார் என்றால் அவர் செய்வதுதான் விதிப்படி தவறு.

 

ஆகவே அஸ்வின் செய்தது சரி இதற்காக அவரது நடத்தையை வைத்து அவரது குணாம்சத்தைச் சிதைப்பது கூடாது. மேலும் இது அஸ்வினுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.  ரன்னரை ஏமாற்றி பந்து வீசுவதை தாமதப்படுத்தி, அவர் கிரீசை விட்டு நகரும் வரை காத்திருந்து ரன் அவுட் செய்தார் அஸ்வின் என்று நடுவர்கள் உணரத்தேவையில்லை.  ஏனெனில் பந்து அஸ்வின் கையில் இருக்கும் வரை ஆட்டம் உயிருடன் இருப்பதாகவே அர்த்தம், பேட்ஸ்மென் எப்படி அவர் வீசிவிட்டார் என்று நினைத்து கிரீசை விட்டு வெளியேற முடியும்? அஸ்வின் நோக்கத்தை இங்கு கேள்வி கேட்க முடியாது, பேட்ஸ்மென் பக்கம்தான் தவறு.

 

அஸ்வின் முன் கூட்டியே தீர்மானித்தார் என்று கூறுபவர்களுக்கு என் பதில் இதுதான்: முன் கூட்டியே முடிவு செய்தால் கூட என்ன தவறு? பவுலர்கள் பேட்ஸ்மென்களை எல்.பி., பவுல்டு, கேட்ச் என்று பல முறைகளில் வீழ்த்துகின்றனர். அதில் விதிப்படி இதுவும் ஒரு முறைதான். எனவே மற்ற அவுட்களெல்லாமும் கூட முன் கூட்டியே திட்டமிடப்படுவதுதான், அப்படித்தான் மன்கட் அவுட்டும்.  அதே போல் அஸ்வின் எச்சரித்திருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர் ஆனால் எச்சரிக்கை என்பது ஒரு மாயை. அவசியமில்லை.

 

இவ்வாறு அந்தப் பத்தியில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x