Last Updated : 30 Apr, 2019 01:33 PM

 

Published : 30 Apr 2019 01:33 PM
Last Updated : 30 Apr 2019 01:33 PM

ஜேம்ஸ் பாக்னர் வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை: நெட்டிசன்கள் வாழ்த்து மழை; ட்விட்டரில் விளக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர், தனது நண்பர் குறித்து வெளியிட்ட புகைப்படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இதனால், ட்விட்டரில் விளக்கம் அளித்து மன்னிப்பு கோரினார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர். 69 ஒருநாள் போட்டிகளிலும், 24 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில், ஜேம்ஸ் பாக்னர் இன்ஸ்ட்ராகிராமில் நேற்று ஒரு புகைப்படத்தையும், சில கருத்துக்களையும் பதிவிட்டார்.

அதில் " புகைப்படத்தில் இருப்பவர் என்னுடைய வீட்டில் குடியிருப்பவர்  ஜப். நானும் இவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். இவர் என்னுடைய பாய்பிரண்ட் இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால், என் தாய் ரோஸ்லின் பாக்னருடன் விருந்து அளித்தோம்" என்று தெரிவித்திருந்தார்.

ஜேம்ஸ் பாக்னரின் இந்த பதிவு இன்ஸ்ட்ராகிராமில் வைரலானது. தன்னுடைய வீட்டில் குடியருக்கும் நண்பர் ஜப், தன்னுடைய ஆண் தோழர்(ஒரினச்சேர்க்கையாளர்) என்று குறிப்பிட்டதாக நினைத்து நெட்டிசன்கள் அனைவரும் பாக்னருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

வெளிப்படையாக நீங்கள் ஒரு ஒரினச்சேர்க்கையாளர் என்று கூறியதற்கு வாழ்த்துக்கள் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஜேம்ஸ் பாக்னர் ஒரு ஒரினச் சேர்க்கையாளர் என்று நினைத்து வாழ்த்துக்கூறி ட்விட் செய்தது. தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பதிவு அனைவராலும் தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டு தன்னைபற்றி பலரும் தவறாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று அறிந்த ஜேம்ஸ் பாக்னர் பதற்றமடைந்தார். தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்பதை மறுத்து, அதன்பின் இன்று காலை விளக்கம் அளித்தார்.

ஜேம்ஸ் பாக்னர் இன்ட்ராகிராம் பதிவில் அளித்த விளக்கத்தில், " நான் வெளியிட்ட புகைப்படம் என்னுடைய சிறந்த நண்பர் ராப்ஜாப்ஸ்டாவினுடையது. என்னுடைய வீட்டில் ஒரு பகுதியில் இவர் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால், நான் நேற்று இரவு பதிவிட்ட கருத்தான 5ஆண்டுகளாக ஒன்றாக வாழ்கிறோம் என்ற வார்த்தையை தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். நான் ஓரினச்சேர்க்கையாலர் அல்ல. அதேசமயம், எல்ஜிபிடி பிரிவினருக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்பு அன்புதான் என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது. எப்படியாகினும், ராப்ஜாப்ஸ்டா என்னுடைய உயிர்தோழர்.கருத்து பதிவிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி " எனத் தெரிவித்தார்.

ஜேம்ஸ் பாக்னரின் விளக்கத்தைப் பார்த்தபின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது. அதில், " ஜேம்ஸ் பாக்னர் சிறந்த வீரர். அவர் ஒருபோதும் தன்னுடைய சமூக வலைதளத்தில் விளையாட்டாக எதையும் பதிவிடமாட்டார் என்று நம்பியே அந்த புகைப்படத்தைப் பார்த்தோம். அவரின் கருத்து இருவருக்கும் இடையிலான உறவைக் குறிப்பதாக இருந்தது. நாங்களும் தவறாகவே புரிந்துகொண்டோம். அனைவரின் கருத்து பாக்னரை பாதித்துள்ளது என்பதை உணர்கிறோம். தவறாக நினைத்தமைக்கு ஆஸ்திரேலிய வாரியமும் வருத்தம் தெரிவிக்கிறது " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x