

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.இந்தோ-ஐரோப்பிய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நிறுவப் பட்டுள்ள இந்த விருது, பிரிட்டன் நாடாளுமன்ற பிரபுக்கள் சபையில் (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. விளையாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புக்காகவும், சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்கள் முன்னேறுவதற்கு குஷி அறக்கட் டளை மூலம் பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
ஏற்புரை நிகழ்த்திய கபில்தேவ், “பொதுவாகவே இங்கிலாந்தை வெறுக்கக்கூடியவன் நான். அவர்கள் இந்தியாவை ஆண்டதே அதற்கு காரணம். எனினும் அவர்கள் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட்டை கற்று தந்ததால் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு கிரிக்கெட் கற்றுக்கொடுத்த இங்கிலாந்தால் சிறப்பாக கிரிக்கெட் ஆடமுடியவில்லை. சிறப்பாக கிரிக்கெட் ஆட முடிந்த என்னால் ஆங்கில மொழியை நன்றாக பேச முடியவில்லை” என்றார்.