Last Updated : 22 Apr, 2019 06:22 PM

 

Published : 22 Apr 2019 06:22 PM
Last Updated : 22 Apr 2019 06:22 PM

ஐபிஎல் இறுதிப்போட்டி சென்னையிலிருந்து மாற்றம்: பிசிசிஐ முடிவு..ஆனாலும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரேயொரு ஆறுதல்..

மூடப்பட்ட 3 கேலரிகளை திறக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அரசிடமிருந்து அனுமதிக் கோரத் தவறியதன் காரணமாக சென்னையில் மே மாதம் 12ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப்போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டது.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாப் 2 அணிகளில் இடம்பெறுமானால் முதலாம் தகுதிச் சுற்று ஆட்டத்தை சென்னையில் ஆட  வாய்ப்புள்ளது. ஆனால் மே 8 மற்றும் மே 10ம் தேதி குவாலிஃபையர் ஆட்டங்கள் விசாகப்பட்டிணத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

“ஐ, ஜே, கே ஆகிய 3 ஸ்டாண்டுகளை திறக்க தேவைப்படும் அனுமதியைப் பெறவில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதால்  ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐ நிர்வாகக் கமிட்டியின் விநோத் ராய் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

 

“நாக் அவுட் போட்டிகளின் கேட் டிக்கெட் விற்பனைகள் பிசிசிஐ விருப்பத் தெரிவாகும். அதனால் நாங்கள் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டிணத்தில் இரண்டு நாக் அவுட் போட்டிகள் நடைபெறும்” என்று நிர்வாகக் கமிட்டி கூறியுள்ளது.

 

சென்னை சேப்பாக்க மைதானத்தின் 3 ஸ்டாண்டுகளைச் சேர்த்தால் 12,000 த்திற்கும் அதிகமான டிக்கெட் விற்பனையாகும். ஆனால் அங்கு அனுமதி இல்லை என்றால் அந்த கேட் கலெக்‌ஷன் இல்லாமல் போகும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

 

2012 முதல் இந்த 3 ஸ்டாண்ட்கள் மூடியே உள்ளன. ஒரேயொரு இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் விதிவிலக்காக டிக்கெட் இந்த ஸ்டாண்டுகளில் அனுமதிக்கப்பட்டது.

 

அனைத்து நாக் அவுட் போட்டிகளின் கேட் கலெக்‌ஷனும், டிக்கெட் விற்பனையும் பிசிசிஐ-அதிகாரத்தின் கீழ் வருகிறது என்றால் ஏன் குவாலிஃபையர் 1 போட்டி சென்னையில் அனுமதிக்கப்பட்டது என்று கேட்டதற்கு விநோத் ராய், “சென்னை அணி கடந்த முறை சாம்பியன் என்பதால் குவாலிஃபயர் 1 மற்றும் இறுதிப் போட்டி சென்னைக்கு வழங்கப்பட்டது. இப்போது அவர்கள் டாப் 2 அணிக்குள் வரும்போது நாம் அனைத்துப் போட்டிகளையும் அங்கிருந்து அகற்ற முடியாது. ஒரேயொரு நாக் அவுட் போட்டி அவர்களுக்கு அங்கு வழங்குவது முறையானதுதான்” என்றார்.

 

ஹைதராபாத்தில் மே 6,8, 10ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளதால் 12ம் தேதி இறுதிப் போட்டி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x