

ஏகப்பட்ட கணக்கீடுகளுக்கு இடையே மிக மிக அரிதான பிளே ஆஃப் வாய்ப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று பெங்களூருவில் ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது. கேப்டன் விராட் கோலி மீண்டும் ஒரு டாஸை இழந்தார்.
ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆட்டம் கடும் மழை காரணமாக இன்னும் தொடங்கவில்லை. வெற்றி பெற்றேயாக வேண்டிய சூழ்நிலையில் குறைந்த ஓவர் போட்டியில் டாஸைத் தோற்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஆனால் என்ன செய்வது விராட் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தொட்டதெல்லாம் துலங்கியது போல் எதுவும் துலங்கவில்லை. அங்கும் துலங்கியபோதிலும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை படுமோசமாக இழந்தது இந்திய அணி.
அவர் வரவர டாசில் கூட ஜெயிப்பதில்லை என்று ரசிகர்கள் கேலி பேசும் நிலையில் இன்று இன்னொரு டாஸையும் இழந்தார் விராட் கோலி.
அது குறித்து ஒரு ரிலாக்சான மனநிலையில் பேசிய விராட் கோலி:
தொடங்குவதற்கு முன்பாக நாணயத்தைச் சுண்டி டாஸ் போடுவதைப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஏன்னு கேட்டா 13 டாஸ்களில் 10-ல் தோற்றுள்ளேன். இந்த பிட்ச் அருமையானது. இலக்கை விரட்டுவது சாதகமாக அமையும். ஆனால் அவர் டாஸ் வென்று விட்டார்.
ஆனால் நன்றாக பேட் செய்தால் டாஸையும் முறியடித்து இந்த மைதானத்தில் வெற்றி பெற முடியும். எங்கள் அணி அதிகபட்சமாகப் போனால் 12 புள்ளிகள் எடுக்கலாம். கடைசி 2 போட்டிகளை மகிழ்வுடன் ஆடப்போகிறோம். சில வேளைகளில் சீசன் இப்படிப் போகும் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நானும் பார்த்திவும் தொடக்கத்தில் நன்றாக ஆட வேண்டும். அவர்கள் அணியில் நிறைய வலது கை வீரர்கள் இருப்பதால் பவன் நெகி ஆடுகிறார். ஷிவம் துபே இல்லை.
என்றார் விராட் கோலி.