Last Updated : 24 Apr, 2019 08:46 AM

 

Published : 24 Apr 2019 08:46 AM
Last Updated : 24 Apr 2019 08:46 AM

சேப்பாக்கத்தில் 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்காததால் தமிழக அரசுக்கு ரூ.8 கோடி வருமானம் இழப்பு; இறுதிப் போட்டி இடம் மாற்றம் ரசிகர்களுக்கு தண்டனையா?

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத் தில் காலியாக உள்ள 3 கேலரி களின் பிரச்சினையால் இங்கு நடைபெற இருந்த ஐபிஎல் டி 20 கிரிக் கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஹைதரா பாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை ரசிகர்களுக்கு இது பேரிடியாகவே அமைந்துள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு காவிரி பிரச்சினை போராட்டங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளை யாட வேண்டிய 6 ஆட்டங்களை புனேவில் விளையாட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது. இதனால் இரு வருட தடை காலத்துக்குப் பிறகு திரும்பிய சிஎஸ்கே-வின் ஆட்டத்தை காண காத்திருந்த ரசிகர்கள் மனம் உடைந்தனர்.

எனினும் தோனியின் மீதும் சிஎஸ்கே அணியின் மீதும் தீரா பற்றுக்கொண்ட தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் சுமார் 24 மணி நேரத்துக்கும் மேல் ரயிலில் பயணம் செய்து புனேவில் நடைபெற்ற ஆட்டத்தை பார்க்கச் சென்றனர். ரசிகர்களின் அளவு கடந்த பாசத்தால் தோனியே கூட ஒரு முறை சென்னை மக்கள் தன்னை தத்தெடுத் துக்கொண்டது போன்ற உணர்வை தருவதாக மனம் நெகிழ்ந்திருந்தார்.

சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு தற் போதுதான் சிஎஸ்கே அணி தனது ஆட்டங் களை சேப்பாக்கத்தில் விளையாடி வரு கிறது. ஒவ்வொரு ஆட்டத்தையும் காண மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுஒருபுறம் இருக்க போட்டி யின் தினத்தில் டிக்கெட்கள் கிடைக்காமல் மைதானத்தின் வெளிப்புறத்தில் பல்லா யிரக்கணக்கான ரசிகர்கள் அலைந்தபடி இருப்பதையும் கண்கூடாக பார்க்க முடியும்.

38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கக்கூடிய சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 8 வருடங்களாக ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 12 ஆயிரம் இருக்கைகள் காட்சிப் பொருளாகவே உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இந்த 3 கேலரிகளையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் புதுப்பித்தது.

ஆனால் இதற்கு தங்களிடம் முறைப் படி அனுமதி பெறவில்லையென சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் குற்றம் சாட்டியது. இதற்கு தீர்வு காண தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மாற்று யோசனையை முன் வைத்தது. இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஆட்சியரிடம் கடிதமும் வழங்கியது.

இது ஒருபுறம் இருக்க சென்னை மாநகராட்சிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே மைதான குத்தகை தொடர்பாக பிரச்சினை எழுந்தது. இவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படாததால் சேப்பாக்கத்தில் உள்ள 3 கேலரிகளையும் சர்வதேச கிரிக்கெட் போட்டி மற்றும் ஐபிஎல் டி 20 தொடரின் ஆட்டங்கள் நடைபெறும் சமயங்களில் ரசிகர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளது.

சென்னை மாநகராட்சியோ குத்தகை தொகையாக ரூ.1500 கோடியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங் கத்தை நிர்பந்திக்கிறது. ஆனால் இலாப நோக்கற்ற அமைப்பாக இருப்பதால் தங்களால் அவ்வளவு தொகையை செலுத்த வழிவகை இல்லை எனவும் ஒரு கணிசமான தொகையை நிர்ணயிக்க அரசு தரப்பினர் முன்வந்தால் அதனை நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வருமாறு நீதிமன்றமும் அறிவுரை வழங்கியிருந்தது. ஆனால் இவை எல்லாம் நடைபெற்று 4 ஆண்டு கள் ஆகியும் அரசு தரப்பில் இருந்து 3 கேலரிகளுக்கும் அனுமதி வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மறைந்த முன்னாள் முதல்வரான ஜெய லலிதா விளையாட்டுத் துறையின் மீது அதிக அக்கறை கொண்டவராக இருந்தார். விளையாட்டுத்துறையை மேம்படுத்து வதற்கு பல்வேறு திட்டங்களையும், பெரு வாரியான நிதியையும் ஒதுக்கீடு செய் தார். இதேபோல் மறைந்த மற்றொரு முன் னாள் முதல்வரான கருணாநிதி, கிரிக் கெட் மீது அதிக ஈர்ப்பு கொண்டவர். சேப் பாக்கம் மைதானத்தில் சர்வதேச போட்டி களை அவர், நேரில் கண்டுகளித்துள்ளார்.

இப்படியிருக்கும் போது குத்தகை தொகையை மட்டும் கருத்தில் கொண்டு மைதானத்தில் உள்ள 3 கேலரிகளை முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும் என சிஎஸ்கே ரசிகர்கள் மனம் வெதும்புகின்றனர். மேலும் கிரிக்கெட் போட்டிகள் வழியாக கிடைக்கும் வருமானத்தையும், அதன் மூலம் பெறும் லாபத்தையும் கிரிக்கெட் அமைப்புகள் அப்படியே தங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்வதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஏனெனில் கிரிக்கெட் ஆட்டங்களில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அந்த விளையாட்டுக்கான கட்டமைப்புகளை யும், மேலும் அடிமட்டத்தில் இருந்து விளை யாட்டை மேம்படுத்துவற்கான பணிகளை யும் கவனிக்க வேண்டி உள்ளது. இது ஒருபுறம் இருக்க 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் டிக்கெட் விற்பனை வழியாக அரசுக்கு கிடைக்கும் வருவாயிலும் கணிசமான இழப்பு ஏற்படுகிறது.

அனுமதிக்கப்படாத 3 கேலரிகளில் 12 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இதில் ஒவ்வொரு இருக்கைக்கான டிக் கெட் விலை ரூ.1500 ஆகும். இந்த வகை யில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ.1.80 கோடி வருமானம் கிடைக்கப்பெறும். இதில் 25 சதவீதம் கேளிக்கை வரி (இந்த தொகை முழுவதும் மாநில அரசையே சென்றடையும்), 28 சதவீதம் ஜிஎஸ்டி-யை தமிழக கிரிக்கெட் சங்கம் செலுத்த வேண்டும். இந்த வகையில் ஒரு ஆட்டத்துக்கு ரூ.90 லட்சத்துக்கு மேல் வரியாக மட்டும் அரசுக்கு சென்றடையும்.

ஒட்டுமொத்தமாக 7 லீக் ஆட்டங்கள், ஒரு தகுதி சுற்று ஆட்டம், இறுதி ஆட்டம் (நடைபெற்றால்) என மொத்தம் 9 ஆட்டங்கள் வாயிலாக மட்டும் அரசுக்கு ரூ.8.10 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால் இதையும் அரசுத் தரப்பு கண்டுகொள்வதாக இல்லை.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வெற்றி கரமான அணியாக திகழ்ந்து வருகிறது. சென்னையில் மட்டும் இல்லை போட்டி நடைபெறும் மற்ற நகரங்களான பெங் களூரு, ஹைதராபாத், கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு மைதானங்களிலும் மஞ் சள் நிற உடை அணிந்த ரசிகர்கள் கூட்டத் தினர் 50 சதவீதம் இடத்தை ஆக்கிரமித் திருப்பதை காண முடியும். இதற்கு காரணம் சென்னையில் நடைபெறும் ஆட் டங்களுக்கு டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் மற்ற நகரங்களுக்கு படையெடுப்பதுதான்.

இதை தவிர்க்கவும், ஐபிஎல் இறுதி ஆட்டம் மட்டுமின்றி வருங்காலத்தில் ஐசிசி தொடர்களையும் சென்னை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்கு வழி காணும் விதமாக அரசு தரப்பில் இருந்து பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் விரைவில் தீர்வு காணவேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக சென்னை நகர கிரிக்கெட் ரசிகர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்ற கருத்தும் ஒலிக்கத் தவறவில்லை.

என்ன சொல்கிறது மாநகராட்சி?

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சேப்பாக்கம் விளையாட்டரங்கில் விதிகளை மீறி கட்டியதாக சில கேலரிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற வேண்டும் என்றால், முதலில் அந்த இடம் தொடர்பாக அரசுடன் போடப்பட்ட குத்தகை காலம் முடியாமல் இருக்க வேண்டும். குத்தகை தொகையை முறையாக அரசுக்கு செலுத்தியிருக்க வேண்டும். பின்னர் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடம் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கான திட்ட அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர் மாநகராட்சியிடம் கட்டிட அனுமதி பெற வேண்டும். அதற்கு பிறகே கேலரிகளுக்கு மாநகராட்சி வைத்துள்ள சீலை அகற்ற முடியும்” என்றார்.

ஹைதராபாத் ஆடுகள மேற்கூரைகள் கடும் சேதம்; இறுதிப் போட்டி சென்னைக்கு திரும்புமா?

ஐபிஎல் டி 20 தொடரில் வரும் மே 12-ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை மைதானத்தையொட்டிய பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் பெவிலியன் (தெற்கு கேலரி) பகுதியில் ஆயிரக்கணக்கான இருக்கைகள் உள்ள கேலரியின் மேற்கூரை கடும் சேதம் அடைந்தது.

மேற்கூரையின் பெரும்பாலான பகுதி காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சில பகுதிகள் அப்படியே கிழிந்து தொங்குகின்றன. இறுதிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள நிலையில் இந்த சம்பவம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனால் பிசிசிஐ திட்டமிட்டபடி மே 12-ம் தேதி ஐபிஎல் இறுதி ஆட்டத்தை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடத்த முடியுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனெனில் குறித்த காலக்கட்டத்துக்குள் சேதம் அடைந்த மேற்கூரையை சீரமைக்க முடியுமா? என்பது தெரியவில்லை. இதற்கிடையே போட்டி ஒளிபரப்பாளர் மற்றும் 3 கேலரிகளால் பாதிக்கப்படும் கோடிக்கணக்கிலான வருவாய் இழப்பீடை காரணம் காட்டும் பிசிசிஐ, விதிமுறைகளை சற்று தளர்த்தி மீண்டும் இறுதிப் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு ஏதுவாக குத்தகை தொகை விவகாரத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையனும் துரிதமாக செயல்பட்டு விரைவாக நடடிவடிக்கை வேண்டும் என்றும் அவ்வாறு போட்டியை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தினால் இந்த அரசின் மதிப்பு விளையாட்டு ஆர்வலர்களின் மத்தியில் கூடுதல் நன்மதிப்பை பெறும் என சென்னை நகர கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x