Published : 18 Sep 2014 11:33 AM
Last Updated : 18 Sep 2014 11:33 AM

500-வது டெஸ்டில் மே.இ.தீவுகள் அபார வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 296 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது மேற்கிந்தியத் தீவுகள். 500-வது டெஸ்ட் போட்டியை வெற்றியோடு முடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 124 ஓவர்களில் 380 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேசம் 62.3 ஓவர்களில் 161 ரன்களுக்கு சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 219 ரன்கள் முன்னிலை பெற்ற மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசத்துக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸை ஆடியது. அந்த அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 67 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. சந்தர்பால் 63, பிளாக்வுட் 43 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

சந்தர்பால் சதம்

4-வது நாளில் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளாக்வுட் 111 பந்துகளில் அரைசதமடித்தார். மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய சந்தர்பால் 134 பந்துகளில் சதமடிக்க, டிக்ளேர் செய்வதாக அறிவித்தது மேற்கிந்தியத் தீவுகள். அப்போது அந்த அணி 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்தது. சந்தர்பால் 134 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 101 ரன்களும், பிளாக்வுட் 120 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

489 ரன்கள் இலக்கு

இதையடுத்து 489 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தமிம் இக்பால்-சம்சுர் ரஹ்மான் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்தது. 27 பந்துகளைச் சந்தித்த சம்சுர் ரஹ்மான் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த அனாமுல் ஹக் டக் அவுட்டானார்.

இதையடுத்து தமிம் இக்பாலுடன் இணைந்தார் மோமினுல் ஹக். இந்த ஜோடி ஆமை வேகத்தில் ஆடியது. இதனால் 32-வது ஓவரில்தான் வங்கதேசம் 100 ரன்களை எட்டியது. தமிம் இக்பால் 146 பந்துகளிலும், மோமினுல் ஹக் 125 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். அந்த அணி 158 ரன்களை எட்டியபோது தமிம் இக்பால் ஆட்டமிழந்தார். அவர் 181 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்தார்.

192-க்கு ஆல்அவுட்

இதன்பிறகு வங்கதேசத்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. மஹமதுல்லா ரன்ஏதுமின்றி வெளியேற, மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மோமினுல் ஹக் 56 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்தவர்களில் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (12), ஷஃபியுல் இஸ்லாம் (14) ஆகியோரைத் தவிர எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதனால் 77.4 ஓவர்களில் 192 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம். அந்த அணி கடைசி 8 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சுலைமான் பென் 5 விக்கெட்டுகளையும், ஜெரோம் டெய்லர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சதமடித்த சந்தர்பால் ஆட்டநாயகனாகவும், பிரத்வெய்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

சாதனைத் துளிகள்

சந்தர்பால் தனது 30-வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் வரிசையில் 10-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடனுடன் பகிர்ந்து கொண்டார் சந்தர்பால்.

வங்கதேச வீரர் ரபியுல் இஸ்லாமை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் 100-வது விக்கெட்டை எடுத்தார் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெரோம் டெய்லர். அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ள 20-வது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஆவார். டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சுலைமான் பென்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x