Published : 03 Apr 2019 02:50 PM
Last Updated : 03 Apr 2019 02:50 PM

தோனி, பிராவோ புதிய மைல் கல்லை எட்டுவார்களா?- மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணி இன்று மோதல்

மும்பையில் இன்று நடைபெறும் 12-வது சீசன் ஐபிஎல் போட்டியில் முக்கியமான லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த மும்பை அணியும், நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியும், டிவைன் பிராவோவும் புதிய மைல்கல்லை எட்ட உள்ளனர்.

நடப்பு ஐபிஎல் சீசன் போட்டியில் இதுவரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது

மும்பை அணியைப் பொறுத்தவரை இன்று நடக்கும் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக, விக்கெட் கீப்பர் இஷான் கிஷானைக் களமிறக்குவார்கள் என்று தெரிகிறது. மேலும் லசித் மலிங்காவுக்குப் பதிலாக மே.இ.தீவுகள் வீரர் அல்சாரி ஜோஸப் அல்லது பென் கட்டிங்கை களமிறக்கலாம்.

அதேபோல சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு. சான்ட்னருக்குப் பதிலாக ஹர்பஜன் மீண்டும் அழைக்கப்படலாம்.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்கில் வலிமையான அணியாக இருக்கிறது. கடந்த ஒரு போட்டியில் மட்டுமே வாட்ஸன் சரியாக விளையாடவில்லை. மற்ற இரு போட்டிகளிலும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராயுடு இன்னும் இயல்பான ஆட்டத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.

ஆனால், கடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், தோனி நிலைத்து ஆடி  46 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து பேட்டிங்கில் ஃபார்முடன் உள்ளார். பந்துவீச்சில் கடைசி ஓவரில் இரு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பிராவோ வித்திட்டார்.

இதுதவிர இம்ரான் தாஹிர், ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங் ஆகியோர் சுழற்பந்துவீச்சுக்கு வலிமை சேர்க்கின்றனர்.

இதுவரை சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியதில் 14 போட்டிகளில் மும்பை அணி வெற்றியும், 12 போட்டிகளில் சிஎஸ்கே அணியும் வென்றுள்ளது.

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியும், ஆல்ரவுண்டர் வோவும்  புதிய மைல்கல்லை இந்தப் போட்டியில் எட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தோனிக்கு 2 ரன்கள் தேவை?

msjpgதோனி : படம் உதவி ஐபிஎல்100 

ஐபிஎல் போட்டியில் அதிகமான ரன்கள் அடித்தவர்கள் வரிசையில் தோனி 4,123 ரன்கள் குவித்து தற்போது 9-வது இடத்தில் உள்ளார். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதில் 574 ரன்கள் சிஎஸ்கே அணிக்காக அல்லாமல், ரைஸிங் புனே ஜெயின்ட் அணியில் விளையாடியபோது சேர்த்ததாகும். இதை 4,123 ரன்களில் இருந்து கழித்துப் பார்த்தால், 3,549 ரன்கள் மட்டுமே வரும்.

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடியதில் தோனி 449 ரன்கள் சேர்த்துள்ளார். அதையும் கணக்கில் கொள்ளும் போது  தற்போது சிஎஸ்கே அணிக்காக மட்டும் தோனி 3,998 ரன்கள் சேர்த்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் தோனி 2 ரன்கள் எடுத்தால், ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 4 ஆயிரம் ரன்கள் சேர்த்தவர் எனும் பெருமை பெறுவார்.

சாதனைக்காக பிராவோ

bravojpgடிவைன் பிராவோ: படம் உதவி ஐபிஎல்50 

சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோவும் புதிய மைல்கல்லை எட்ட உள்ளார். டிவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 142 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

அதில் குறிப்பாக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிகமாக 27 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரும் டிவைன் பிராவோ என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் பிராவோ இதுவரை சிஎஸ்கே அணிக்காக 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் போட்டியில் ஒரு விக்கெட்டை பிராவோ எடுத்தால் சிஎஸ்கே அணிக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் பெருமையை பிராவோ பெறுவார்.

பிராவோவுக்கு அடுத்தார்போல், அஸ்வின் (90), மோர்கல்(76), ஜடேஜா (69), மோகித் சர்மா (57) ஆகியோர் உள்ளனர். இதில் அஸ்வின், மோர்கல் அணியில் இல்லாத நிலையில் ஜடேஜா, மோகித் சர்மா மைல்கல்லை எட்ட நீண்டகாலமாகும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x