Published : 07 Apr 2019 10:37 AM
Last Updated : 07 Apr 2019 10:37 AM

பாக். பவுலர் சொஹைல் தன்வீரின் ஐபிஎல் சாதனையை முறியடித்த அல்ஸாரி ஜோசப்: சன் ரைசர்ஸுக்கு மோசமான தோல்வியைக் காட்டிய மும்பை

ஹைதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 19வது போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்து மும்பை இந்தியன்ஸை 136 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது. தொடர்ந்து  ஆடிய சன் ரைசர்ஸ் அணி 96 ரன்களுக்குச் சுருண்டது. மும்பை இந்தியன்சின் மே.இ.தீவுகள் வேகப்புயல் அல்ஸாரி ஜோசப் 12 ரன்களுக்கு 6 விக்கெட் எடுத்தது புதிய ஐபிஎல் சாதனையாக அமைந்தது.

 

இதற்கு முன்னர் சொஹைல் தன்வீர் 2008-ல் 6/14 என்று எடுத்ததுதான் ஐபிஎல் சாதனையாக இருந்து வந்தது. சன் ரைசர்ஸ் அணி தன் மிகக்குறைவான ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, இதற்கு முன்பாக 2015-ல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக 113  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதே குறைவான ரன் எண்ணிக்கையாக இருந்தது.

 

தன் அறிமுக ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே டேவிட் வார்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு செய்தார் ஜோசப், இதுவும் ஒரு ஐபிஎல் சாதனையாகும். மேலும் தன் அறிமுக ஓவரிலேயே விக்கெட் மெய்டன் சாதனையிலும் பாட் கமின்ஸுடன் இணைந்தார் ஜோசப்.

 

மலிங்கா இல்லாததால் இந்த வாய்ப்பைப் பெற்ற ஜோசப் தனக்கு கிடைத்த வாய்ப்பை இருகைகளிலும் அள்ளிக் கொண்டார்.  தன் முதல் பந்தில் டேவிட் வார்னரை இன்சைடு எட்ஜில் பவுல்டு செய்த ஜோசப், பிறகு விஜய் சங்கரை டாப் எட்ஜ் செய்ய வைத்து பெவிலியன் அனுப்பினார்.

 

16வது ஓவரில் இவர் மீண்டும் வந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் பக்கம் போட்டியை உறுதி செய்தது. தீபக் ஹூடாவுக்கு ஒரு வேகமான நேர் பந்து இவரும் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார்.  அடுத்த பந்தே அபாய வீரர் ரஷீத் கான் புல் ஷாட்டை கொடியேற்ற ஜோசப்பே கேட்சை எடுத்தார். பிறகு புவனேஷவர் குமாரின் ஸ்டம்புகளை பறக்க விட்ட ஜோசப், சித்தார்த் கவுல் விக்கெட்டை வீழ்த்தி 6 விக்கெட்டுகளை 12 ரன்களுக்கு கைப்பற்றினார் 96 ரன்களுக்குச் சுருண்டு ஹைதராபாத் மோசமான தோல்வி தழுவியது

 

முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் 65/5 என்று சரிந்தது. ரோஹித் சர்மா, சூரிய குமார் யாதவ், டி காக், குருணால் பாண்டியா, இஷான் கிஷன் ஆகியோர் சடுதியில் நடையைக் கட்டினர்.

 

பொலார்ட் இறங்கி நிதானமாக 13 பந்துகளில் 9 ரன்கள் என்று நின்று பிறகு 19, 20வது ஓவர்களில் அதிரடி காட்டினார்.  சித்தார்த் கவுல் ஓவரில் சிக்சர்களுடன் 20 ரன்கள் விளாசிய பொலார்ட், கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரை 19 ரன்கள் விளாசினார்.  8 ரன்களில் பொலார்ட் இருந்த போது ரஷீத் கான் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் வாய்ப்பைப் பிடித்திருந்தால் ஒருவேளை சன் ரைசர்ஸ் வெற்றியே பெற்றிருக்க வாய்ப்பிருந்த்து, ஆனால் கேட்சை விட்டதால் பொலார்ட் வெளுத்துக் கட்டி விட்டார்.

 

மொகமது நபியும் பொலார்டுக்கு ஒரு கேட்சை விட்டார், கொடுமை என்னவெனில் கேட்சை விட்டதோடு பந்தை பவுண்டரிக்கு வெளியே தள்ளியதால் சிக்ஸ் ஆனது. தீபக் ஹூடாவும் மோசமான மிஸ் பீல்டில் பவுண்டரி ஒன்றை விட்டார். ஆகவே பொலார்டுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. மும்பை இந்தியன்ஸ் 136 ரன்களை எடுத்தது.

 

ஆட்ட நாயகன் அல்ஸாரி ஜோசப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x