Published : 14 Apr 2019 01:44 PM
Last Updated : 14 Apr 2019 01:44 PM

விராட் கோலி புதிய சாதனை: டி20 போட்டியில் ரெய்னாவை பின்னுக்கு தள்ளி புதிய மைல் எட்டினார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 போட்டியில், சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதுவரை அனைத்துவிதமான  டி20 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா 8,145 ரன்கள் சேர்த்து  இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தார். இந்த ரன்களை சுரேஷ் ரெய்னா 309 போட்டிகளில், 293 இன்னிங்ஸ்களில் அடைந்திருந்தார். ஐபிஎல் போட்டியிலும் 5 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் பெருமையையும் ரெய்னா பெற்றிருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 67 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரெய்னாவின்   சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். கோலி தற்போது அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் 8 ஆயிரத்து 175 ரன்கள் சேர்த்துள்ளார். ரெய்னாவின் சாதனையை அவரைக்காட்டிலும் 48 இன்னிங்ஸ்கள் குறைவாக விளையாடி இந்த சாதனையை கோலி அடைந்துள்ளார்.

இதுவரை விராட் கோலி டெல்லி அணி, இந்தியா அணி, ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காக டி20 போட்டியில்  பங்கேற்றுள்ளார். அதேபோல ரெய்னா சிஎஸ்கே, குஜராத் லயன்ஸ், இந்திய அணி, இந்தின்ஸ், உத்தரப்பிரதேச அணி ஆகியவற்றுக்காகவும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளைப் பொருத்தவரை விராட் கோலி 170 போட்டிகளில் பங்கேற்று  5 ஆயிரத்து 218 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும்.  ரெய்னா 183 ஆட்டங்களில் பங்கேற்று 5 ஆயிரத்து 121 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ஒருசதம், 35 அரைசதங்கள் அடங்கும்.

சர்வதேச டி20 போட்டிகளைப் பொருத்தவரை விராட் கோலி 67 போட்டிகளில் பங்கேற்று 2,263 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் சதமின்றி 20 அரைசதங்கள் மட்டும் கோலி அடித்துள்ளார்.

டி20 போட்டிகளில் இதுவரை அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில், பிரன்டன் மெக்கலம், கிரன் பொலார்ட், சோயிப் மாலிஸ், டேவிட் வார்னர். ஆகியோர் கோலியைக் காட்டிலும் முன்னணியில் இருந்து வருகின்றனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x