Published : 19 Apr 2019 10:51 AM
Last Updated : 19 Apr 2019 10:51 AM

உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு: முகமது அமிர், ஆசிப் அலி இல்லை

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடக்கும் உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சர்பிராஸ் அகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதில் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல அதிரடி ஆட்டக்காரர் ஆசிப் அலியும் சேர்க்கப்படவில்லை.

ஆனால், உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், டி20 தொடரில் பாகிஸ்தான் இங்கிலாந்தில் விளையாடுகிறது. அந்த தொடருக்கு மட்டும் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசமயம் தொடக்க ஆட்டக்காராக அபித் அலி, வேகப்பந்துவீச்சாளர் முகமது ஹசனின் ஆகியோர் முதல் முறையாக உலகக்கோப்பைக்கு வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் அபித் அலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்தான் அறிமுகமாகினார். முதல் போட்டியில் சதமும், அடுத்த போட்டியில் அரைசதமும் அடித்ததால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.

 ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஸ்திரேலய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-5 என்று பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இந்த தொடரில் இடம் பெற்றாமல் இருந்த ஹசன் அலி, ஷதாப் கான், பாபர் ஆசம், பக்கர் ஜமான், ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகியோர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

அதேசமயம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யாஷிர் ஷா, ஷான் மசூத், முகமது அப்பாஸ், சாத் அலி, உமர் அக்மல், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் உடற்தகுதி முகாமுக்கே அழைக்கப்படவில்லை.

உலகக்கோப்பைப் போட்டியில் மே 31-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் மே.இ.தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி விவரம்:

சர்பிராஸ் அகமது(கேப்டன்), பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசம், சோயிப் மாலிக், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், ஷாதப் கான், இமாத் வாசிம், ஹசன் அலி, பாஹீம் அஷ்ரப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஜுனைத் கான், முகமது ஹஸ்னைன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x