Last Updated : 26 Apr, 2019 09:14 AM

 

Published : 26 Apr 2019 09:14 AM
Last Updated : 26 Apr 2019 09:14 AM

மும்பைக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?- சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தோனி தலைமையிலான நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம்செலுத்துகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தேவையான புள்ளிகளை சென்னை அணி பெற்றுவிட்டாலும், லீக் சுற்றை முதலிரு இடங்களுக்குள் நிறைவு செய்வதில் முனைப்பு காட்டக்கூடும்.

அடுத்தடுத்த இரு தோல்விகளை பெற்ற சென்னை அணி தனது கடைசி ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 96 ரன்கள் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருந்தார். அவரிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

லீக் சுற்றின் இறுதி கட்டத்தில் ஷேன் வாட்சன் அதிரடி பார்முக்கு திரும்பியுள்ள நிலையில் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ் ஆகியோரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளனர். நாக்-அவுட் சுற்றுக்கு முன்னதாக இவர்கள் சீராக ரன்கள் குவிக்கத் தொடங்கி விட்டால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

சென்னை அணியின் வெற்றிகளில் பந்து வீச்சாளர்களும் பெரிய பங்கு வகித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேட்டிங்குக்கு சற்று கடினமாக உள்ள சேப்பாக்கம் மைதானத்தின் தன்மையை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மேம்பட்ட வகையில் செயல்பட்டு வரும் தீபக் ஷகார் தொடக்க ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் தனது புத்திசாலித்தனமான பந்து வீச்சால் பலம் சேர்த்து வருகிறார்.

இந்த சீசனில் 16 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள இம்ரன் தகிர் இன்றைய ஆட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரக்கூடும். அவருக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசியாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

இந்த சீசனில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வலு சேர்ப்பவர்களாக உள்ளனர்.

வேகப் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, லஷித் மலிங்காவும் சுழலில் ராகுல் ஷகாரும் சென்னை பேட்ஸ்மேன்ளுக்கு அழுத்தம் தரக்கூடும். இந்த சீசனில் இரு அணிகளும் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த 3-ம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியிருந்தது. அந்த தோல்விக்கு இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.

அணிகள் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ், முரளி விஜய், கேதார் ஜாதவ், சேம் பில்லிங்ஸ், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ரிதுராஜ் கெய்க்வாட், டுவைன் பிராவோ, கரண் சர்மா, இம்ரன் தகிர், ஹர்பஜன் சிங், மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்குர், மோஹித் சர்மா, கே.எம்.ஆஷிப், ஸ்காட் குக்கேலீன், தீபக் ஷகார், என்.ஜெகதீசன்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), குயிண்டன் டி காக், எவீன் லீவிஸ், ஹர்திக் பாண்டியா, கிருணல் பாண்டியா, கெய்ரன் பொலார்டு, யுவராஜ் சிங், சூர்யகுமார் யாதவ், லஷித் மலிங்கா, மயங்க் மார்க்கண்டே, பென் கட்டிங், ஜேசன் பெஹ்ரன்டார்ப், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் ஷகார், பங்கஜ் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சித்தேஷ் லாட், மிட்செல் மெக்லீனஹன், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், அனுகுல் ராய், ரஷிக் சலாம், அன்மோல்பிரீத், பரிந்தர் சரண், ஆதித்யா தாரே, ஜெயந்த் யாதவ்.

தோனிக்கு ஓய்வா?

சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு தேவையான புள்ளிகளை பெற்றுவிட்டதால் முதுகுவலியால் சிரமத்தை சந்தித்து வரும் தோனிக்கு ஓய்வு வழங்கப்படுமா என்பது குறித்து சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹஸ்ஸியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து ஹஸ்ஸி கூறுகையில், “தோனி எந்த ஒரு ஆட்டத்தையும் தவறவிட விரும்பவில்லை. சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை அவர் விரும்புகிறார். சென்னை நகரம், தோனியின் இதயத்துக்கு நெருக்கமான இடத்தில் உள்ளது. அவர் விளையாடுவதையும் சிறப்பாக செயல்படுவதையும் விரும்புகிறார். மேலும் அணி வெற்றி பெறுவதை பார்க்கவும் விருப்பம் கொள்கிறார்.

இதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க முயற்சி செய்வது என்பது கடினமான விஷயம். காயம் தொடர்பான விஷயத்திலும், ஓய்வு எடுப்பதிலும் தோனி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை. நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மும்பை அணியின் பேட்டிங் மிகவும் ஆழமானது.  அந்த அணியில் இறுதிக்கட்ட பேட்டிங்கில் கெய்ரன் பொலார்டு, ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

இதேபோல் இறுதிக்கட்ட பந்து வீச்சுக்காகவும் அந்த அணி அதிகம் மெனக்கெடுகிறது. இதனால் இந்த ஆட்டம் நல்ல சவாலாக இருக்கும். சிறப்பாக தயாராகுவதும், திட்டங்களை வகுப்பதும் முக்கியம். அதிலும் களத்தில் திட்டங்களை செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது” என்றார்.

இதுவரை: ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை அணிகள் இதுவரை 25 ஆட்டங்களில் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 11 ஆட்டங்களிலும், மும்பை அணி 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x