Published : 20 Apr 2019 06:18 PM
Last Updated : 20 Apr 2019 06:18 PM

என் மீதே முழு பாரமும் இறக்கி வைக்கப்படுகிறது... 4ம் நிலையில் களமிறக்கப்பட வேண்டும்: தயங்கித் தயங்கி கருத்தைக் கூறிய ஆந்த்ரே ரஸல்

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய பார்மில் இருக்கும் ஒரு வீரர் என்றால் அது ஆந்த்ரே ரஸல்தான். எதிர்பாராத நிலையிலிருந்து அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று வருகிறார்.  ஆனால் அவரே கூட தயங்கித் தயங்கியே தன்னை 4ம் நிலையில் இறக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

ஆர்சிபி அணிக்கு எதிராக 6 ஓவர்களில் 113 ரன்கள் தேவை என்ற நிலையிலும் கூட அயராது வெற்றிக்கு முயன்று 25 பந்துகளில் 60 ரன்களை விளாசினாலும் கடைசியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வி அடைந்தது. உத்தப்பா நேற்று மட்டைப் போடாமல் 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தால் கொல்கத்தா பக்கம் வெற்றி ஏற்பட்டிருக்கும்.

 

இந்நிலையில் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்த ரஸல், “214 ரன்களை விரட்டுகிறோம், நான் இறங்கும் போது அணி நல்ல நிலையில் இல்லை. நிதிஷ் ராணா நான் என்ன நினைக்கிறேன் என்று என்னிடம் கேட்ட போது எனக்கு ஒரு வழிதான் தெரியும் அது அடித்து ஆடுவது என்றேன்.

 

இறங்கும்போதே ஓவருக்கு 14-15 ரன்களை அடித்தால்தான் வெற்றி என்ற நிலையில் ஒரு பேட்ஸ்மென் இறங்குவது நல்ல சூழ்நிலையல்ல.  நான் இத்தகைய சூழ்நிலைக்கு பழக்கமானவனே. ஆனால் ஏன் கசப்பும் இனிப்பும் கலந்த அனுபவம் என்று கூறுகிறேன் என்றால் ஒரு அணியாக இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.  2 ஷாட்கள் தான் வெற்றிக்குப் பாக்கி ஆனால் முடியவில்லை.

 

நான் இன்னும் முன்னால் களமிறக்கப்பட வேண்டும் (இதைக்கூறும்போது உதட்டின் மேல் விரலை வைத்து அச்சத்துடன் தயங்கினார்).  உள்ளபடியே கூற வேண்டுமெனில் ஒரு அணியாக கொஞ்சம் நெகிழ்வுத்தன்மை தேவை. 4ம் நிலையில் இறங்குவது எனக்கு பிரச்சினையில்லை.

 

நான் கிரீசில் இருந்தால் விராட் கோலி தன் சிறந்த பவுலர்களைப் பயன்படுத்துவார், இந்த நடைமுறையில் இவர்கள் ஓவர்களையும் முடிக்க வாய்ப்புள்ளது, அப்போது கடைசியில் வெற்றி பெற எளிதாக இருக்கும். ஆகவேதான் நான் முன்னமேயே களமிறங்கினால் எதிரணியினர் தங்கள் சிறந்த பவுலர்களை முடித்து விடும் வாய்ப்பு உள்ளது.

 

அதனால்தன கேகேஆர் அணிக்கு நான் முன்னால் இறங்குவது நல்லது, ஆனால் ஒரு அணியாக நாங்கள் உருவாகியுள்ளது... ஆம் அதுதான் நல்ல விடை (இதைக் கூறும்போதும் மிகவும் தயங்கினார்).

 

மிடில் ஓவர்களில் வேகமாக ரன்கள் அடித்திருந்தால் பந்துகளை மிச்சம் வைத்து வென்றிருக்கலாம். ஆனால் இந்த நிலை கவலையளிக்கக் கூடியதுதான்” என்றார் ரஸல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x