Published : 24 Apr 2019 02:16 PM
Last Updated : 24 Apr 2019 02:16 PM

20-ம் நூற்றாண்டு பாணியில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: புதுமை வருமா? போலீஸ் தடியடி நீங்குமா?- ஒரு ரசிகனின் ஆதங்கம்

ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனையில் பழையகாலப் பாணியில் கட்டை கட்டி இரும்புக் கூண்டுக்குள் ரசிகர்களை அடைத்து டிக்கெட் விற்பனை செய்ய அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீஸார் தடியடி நடத்தினர்.

இந்தியாவில் வேறு விளையாட்டே இல்லை என்பதுபோன்று கிரிக்கெட் மீது ரசிகர்களின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை ஈடுகட்டவும் ரசிகர்களின் ஆர்வத்தைப் பணம் பண்ணவும் கண்டுபிடிக்கப்பட்டது ஐபிஎல் கிரிக்கெட்.

அனைத்திலும் புதுமையைப் புகுத்தும் கிரிக்கெட் விளையாட்டில் டிக்கெட் விற்பனை செய்யும் முறை மட்டும் மாறவில்லை. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் டிக்கெட் விற்பதில் மட்டும் பழைய டூரிங் டாக்கீஸ் முறையில் இரும்புக் கூண்டு அமைத்து ரசிகர்களை இரவு முழுதும் காக்க வைத்து விற்பனை செய்கிறார்கள்.

இதனால் ஆயிரக்கணக்கில் குவியும் ரசிகர்கள் மற்றும் ஐபிஎல் வரவேற்பைப் பார்த்து பிளாக்கில் டிக்கெட்டை விற்பதற்காக வரும் சமூக விரோத கும்பலாலும் அப்பகுதியில் எப்போதும் தள்ளுமுள்ளு தகராறு ஏற்படுகிறது.

இவ்வாறு விற்கப்படும் டிக்கெட்டுகள் எண்ணிக்கையும் குறைவு என்கின்றனர் ரசிகர்கள். 75 சதவீத டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே விற்றுவிடுகின்றனர், இதனால் குறைவான எண்ணிக்கையுள்ள டிக்கெட்டுகளை வாங்கிவிட ரசிகர்களும், பிளாக் டிக்கெட் கும்பலும் அலைமோதுவது வழக்கம்.இதனால் தள்ளுமுள்ளு தகராறு ஏற்படுகிறது என்கின்றனர்.

ரசிகர்கள் டிக்கெட் வாங்க வேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் பிளாட்பாரத்தில் கிடக்க லோக்கல் ஆட்கள், பிளாக்கில் டிக்கெட் விற்க வாங்க வருபவர்கள் இடையில் புகுந்து குழப்பம் விளைவிக்கின்றனர். போலீஸார் சரியான முறையைக் கையாண்டு இதைத் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் திடீரென வந்து தடியடி நடத்துகின்றனர் என்கின்றனர் ரசிகர்கள்.

இதனிடையே இன்றும் ஐபிஎல் டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானம் அருகே அலைமோதியது. வழக்கம்போல் பிளாக் டிக்கெட் விற்கும் கும்பல், லோக்கல் இளைஞர்கள் உள்ளே புகுந்து குழப்பம் விளைவிக்க போலீஸார் அனைவர் மீதும் தடியடி நடத்தினர்.

இவ்வாறு தொடர்ச்சியாக நடக்கிறது. அதிக அளவில் ஆன்லைனில் டிக்கெட்டை விற்றுவிட்டு குறைந்த அளவில் கவுண்டரில் விற்பதற்குப் பதிலாக அதையும் ஆன்லைனிலேயே விற்கலாம். மற்றவர்களுக்கு அலைச்சல் மிச்சமாகும். இதுபோன்ற தேவையற்ற பாதுகாப்புப் பிரச்சினையும் தீரும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.

ஆன்லைனில் தேவையற்ற ஏஜெண்டுகள் டிக்கெட் வாங்குவதைத் தடுக்க ஆதார் போன்ற ஏதாவது ஒரு அடையாள அட்டை, அல்லது ஓடிபி மூலம் இணைத்து ஒரு பதிவுக்கு 2 டிக்கெட்டுகள் மட்டுமே என்பதுபோன்ற நடைமுறை கொண்டுவந்தால் ஏஜெண்டுகள் மூலம் மொத்தக் கொள்முதல் தவிர்க்கப்படும் என்கிறார் ரசிகர் ஒருவர்.

இவ்வாறு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை என்கிற பெயரில் சினிமா தொடங்கி அனைத்திலும் கூடுதல் கட்டணக்கொள்ளை நடக்கிறது. எளிதான முறை ஒன்று வரும்போது அதிலும் ரசிகர்கள் பாக்கெட்டில் கைவைக்கும் விதமாக கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நியாயமான கட்டணத்தை வசூலித்து ஐபிஎல்லை ரசிக்கவிடுங்கள் என்கிறார் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த செந்தில் எனும் ரசிகர்.

தடியடிக்கு விடிவுகாலம் பிறக்குமா? புதுமை டிக்கெட் வழங்குவதிலும் வருமா என்பதே ஐபிஎல் ரசிகனின் ஆதங்கம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x