Published : 13 Apr 2019 01:24 PM
Last Updated : 13 Apr 2019 01:24 PM

தோனி நோபால் சர்ச்சை: சவுரவ் கங்குலி கருத்து

ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடுவரிடம் சென்னை அணியின் கேப்டன் தோனி வாக்குவாதம் செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவருமான சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் வியாழக்கிழமை அன்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதின. 152 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டன. 20-வது ஓவரை ஸ்டோக்ஸ் வீச முதல் பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு விளாசினார். 2-வது பந்து நோபாலாக, அதில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். ஃப்ரீஹிட்டாக வீசப்பட்ட அடுத்த பந்தில் தோனி 2 ரன்கள் சேர்த்தார். 3-வது பந்தில் தோனி க்ளீன் போல்டாகி 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சான்ட்னர் 4-வது பந்தை எதிர்கொண்டார். இந்தப் பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றது போல முதலில் தெரிந்தது. அதற்கு களத்தில் இருந்த முதன்மை நடுவர் நோபால் என்று சைகை செய்தார். ஆனா லெக் சைடில் இருந்த நடுவர் இது நோபால் அல்ல என அதை திரும்பப் பெற்றுக் கொண்டார். நடுவர்களின் முரணான தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டு, இறுதியில் நோபால் இல்லை என்றே அறிவிக்கப்பட்டது. அந்தப் பந்தில் 2 ரன்கள் மட்டுமே சான்ட்னர் எடுத்தார்.

ஆனால், தோள்பட்டைக்கு மேலே பந்துவீசப்பட்டும் நோபால் தராததால், மைதானத்துக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, ஆட்டம் நடக்கும் போதே மைதானத்துக்குள் வந்து நோபாலை ஏன் ரத்து செய்தீர்கள் என்று நடுவர்களிடம் வாதிட்டார். இதற்கு முன் தோனி இதுபோல் உணர்ச்சிவசப்பட்டு ரசிகர்கள் பார்த்ததில்லை என்பதால் புதிதாக இருந்தது. ஆனால், நடுவர்கள் நோபால் தர மறுத்துவிட்டதால், தோனி கோபத்துடன் வெளியேறினார்.

தோனியின் இந்தச் செயல் பல மூத்த கிரிக்கெட் வீரர்களிடமிருந்து கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. தவறான முன்னுதாரணமாக தோனி இருக்கக் கூடாது என்கிற ரீதியில் பலரும் கருத்து கூறியுள்ளனர்.

இது குறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் கங்குலியிடம் கேட்டபோது, "எல்லோரும் மனிதர்கள் தான். இங்கு கவனிக்கப்பட வேண்டியது அவரது போட்டி மனப்பான்மை தான். அது அசாத்தியமாக உள்ளது" என சுருக்கமாக முடித்துக் கொண்டார். கங்குலியும் களத்தில் ஆக்ரோஷத்துக்குப் பெயர் போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் செயலுக்கு அவரது ஒரு போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x