

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் முதல் தகுதிப் போட்டியில் லாகூர் லயன்ஸ் அணியால் சாதுவாக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் நேற்று வெகுண்டெழுந்து இலங்கையின் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பிரதான சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொண்டது மும்பை இந்தியன்ஸ். மேலும் லாகூர் லயன்ஸ் அணி நேற்று நியூசிலாந்தின் நாதர்ன் அணியிடம் படுதோல்வி தழுவியதையடுத்தும் மும்பை இந்தியன்ஸுக்கு வாய்ப்பு கூடியுள்ளது.
முதலில் பேட் செய்த சதர்ன் எக்ஸ்பிரஸ் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
162 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர்களான லெண்டில் சிம்மன்ஸ், மைக் ஹஸ்ஸி 15 ஓவர்களில் 139 ரன்களை விளாசினர்.
தொடக்கத்தில் சற்றே நிதானம் காட்டிய சிம்மன்ஸ், ஹஸ்ஸி ஜோடி பவர் பிளேயின் 6 ஓவர்களிஒல் 39 ரன்களைச் சேர்த்தனர். சதர்ன் எக்ஸ்பிரஸ் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சரித் ஜெயம்பதி பந்துகள் ஓரளவுக்கு ஸ்விங் ஆகியது.
6 ஓவர்களுக்குப் பிறகு அடித்து ஆடத் தொடங்கிய ஹஸ்ஸி, சிம்மன்ஸ் ஜோடி அடுத்த 9 ஓவர்களில் மேலும் 100 ரன்களைச் சேர்த்தது. இலங்கை ஸ்பின்னர் சீகுகே பிரசன்னா வீசிய முதல் ஓவரிலேயே சிம்மன்ஸ் அவரை நன்றாக அடித்து ஆடி 11 ரன்களைத் தேற்றினார்.
பிறகு மைக் ஹஸ்ஸி 2 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசினார். 15வது ஓவரில் 60 ரன்களில் ஹஸ்ஸி ஸ்லாக் ஸ்வீப்பில் வெளியேறினார். பொலார்ட் களமிறங்கியவுடன் சிக்சர் அடித்தார். சிம்மன்ஸ் 51 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சர் சகிதம் 76 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். பொலார்ட் 3 சிக்சர்களுடன் 7 பந்துகளில் 20 ரன்கள் எடுக்க 16.2 ஓவர்களில் 165/1 என்று மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியினால் பேட் செய்ய அழைக்கப்பட்ட சதர்ன் எக்ஸ்பிரஸ் 13.2 ஓவர்களில் 90/5 என்று சரிந்தது. அதன் பிறகு முன்னாள் இலங்கை வீரர் மஹரூஃப் களமிறங்கி 22 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர் அடித்து 41 ரன்கள் எடுத்தார். இதனால் 161 ரன்களை அந்த அணி எட்டியது,
நாளை லாகூர் லயன்ஸ், சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியையும் மும்பை இந்தியன்ஸ் பலமான நியூசி.யின் நாதர்ன் அணியையும் எதிர்கொள்கிறது.