

ஃபார்முலா 1 நிர்வாக அமைப்பின் தலைவரும் பல ஆண்டுகளாக விளையாட்டில் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வந்த சார்லி வைட்டிங் காலமானார், அவருக்கு வயது 66.
சிறிது காலமாகவே கடும் நுரையீரல் நோயில் அவர் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்திரேலிய கிராண் பிரீ பந்தயத்தை வார இறுதியில் தொடங்கி வைப்பதற்காக அவர் மெல்போர்னில் இருந்தார். இன்று காலை நுரையீரல் பிரச்சினை தீவிரமடைந்தது.
அதாவது இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக்குழாயில் ரத்தக்கட்டு ஏற்பட்டது, இதனை பல்மனரி எம்பாலிசம் என்று அழைப்பார்கள், இதுதான் சார்லி வைட்டிங்கின் உயிரை இன்று குடித்துள்ளது.
எஃப் 1 என்ற ஒன்று உலகம் முழுதும் பிரசித்தி பெற்றுள்ளது என்றால் அதற்கு வைட்டிங் ஒரு காரணம், இந்தப் பந்தயங்களின் விதிமுறைகளை வடிவமைத்தவரும் அவரே. பார்முலா 1 நிர்வாகக் கமிட்டியில் டெக்னிக்கல் டைரக்டராக வைட்டிங் 1988-ல் சேர்ந்தார். முதலில் இவர் ஒரு சீஃப் மெக்கானிக் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முன்னதாகவே வைட்டிங் தன் எஃப் 1 கரியரை 1977-ல் ஹெஸ்கெத் அணியுடன் தொடங்கினார். 1978-ல் ப்ரபாமுக்கு மாறினார்.
இந்நிலையில் வைட்டிங்கின் மரணம் ஃபார்முலா ஒன் நிர்வாகத்தில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் கருத்தும் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
இவரது இடத்தை பூர்த்தி செய்வது மிகமிகக் கடினம், அடுத்தது யார் என்று இன்னமும் ஃபார்முலா 1 அறிவிக்கவில்லை.