

பொள்ளாச்சியில் என்ன நடக்கிறது என்பது குறித்து யாராவது சொல்ல முடியுமா? என்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கேட்டதற்கு அவரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்து வந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.
இந்தச சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர், அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ பொள்ளாச்சியில் போராட்டமா? பொள்ளாச்சியில் தற்போது என்ன நடக்கிறது என்பது பற்றி யாராவது எனக்கு சொல்ல முடியுமா? “ என்று பதிவிட்டிருந்தார்.
இதனை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
அஷ்வின் பிரபலமாக இருந்தால் அந்த செய்தி என்னவென்று கூட பார்க்காமல் ட்விட்டரில் கேள்வி கேட்பீர்களா? என்று பலரும் அஸ்வினை விமர்சித்தனர்.