Published : 21 Mar 2019 07:41 AM
Last Updated : 21 Mar 2019 07:41 AM

ஐ லீக் கால்பந்து தொடரில் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணியிடம் கோப்பை ஒப்படைப்பு

ஐ லீக் கால்பந்து தொடரில் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணியிடம் முறைப்படி கோப்பை ஒப்படைக்கப்பட்டது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கடந்த 10-ம் தேதி கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் மினவர்வா பஞ்சாப் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் சென்னை சிட்டி அணி 20 ஆட்டங்களில் 43 புள்ளிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து வாகை சூடியிருந்தது.

இந்நிலையில் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணிக்கு சாம்பியன் கோப்பையை முறைப்படி வழங் கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சிட்டி அணி வீரர்கள், அணியின் உரிமையாளரும் தி இந்து குழும இயக்குநர்களில் ஒருவரான ரோஹித் ரமேஷ், அணியின் பயிற்சியாளர் அக்பர் நவாஸ், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் குஷால் தாஸ், ஐ லீக் கால்பந்து அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சுனந்தோ தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரோஹித் ரமேஷ் கூறுகையில், ‘‘இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டின் கால்பந்தாட் டத்தை நாங்கள் வரைபடத்தில் வைத்துள்ளோம். தமிழகத்துக்கு அங்கீகாரம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உள்ளூர் வீரர்கள் அதிக அளவில் ஹீரோ ஐ லீக் தொடரில் பதக்கங்களை பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது”என்றார்.

நிகழ்ச்சியில் ஹீரோ ஐ லீக் சாம்பியன் டிராபியை சென்னை சிட்டி அணியிடம் அகில இந்திய கால் பந்து சங்க பொதுச் செயலாளார் குஷால் தாஸ், ஹீரோ ஐ லீக் கால்பந்து அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சுனந்தோ தார் ஆகியோர் வழங்கினர்.

குஷால் தாஸ் கூறுகையில், “சென்னை சிட்டி அணியின் இந்த வெற்றி அவர்களின் திட்டமிடல், வியூகம் மற்றும் களத்தில் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றின் உண்மையான சான்றாக உள்ளது.

அகில இந்திய கால்பந்து சங்கத்தின் சார்பில் ரோஹித் ரமேஷ் மற்றும் ஓட்டுமொத்த சென்னை சிட்டி அணிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தொடரில் பங்கேற்ற 3-வது ஆண்டிலேயே சென்னை சிட்டி அணி இந்திய கால்பந்தில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் ஹீரோ ஐ லீக் ஃபேர் பிளே விருது ஷில்லாங் லஜோங் அணிக்கு வழங்கப்பட்டது. அதிக கோல்கள் அடித்தவருக்கான விருதை சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் வில்ஸ் பிளாசா, சென்னை சிட்டி அணியின் பெட்ரோ மான்ஸி ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். சிறந்த கோல்கீப்பராக ரியல் காஷ்மீர் அணியின் பிலால் கான் தேர்வு செய்யப்பட்டார்.

சிறந்த டிபன்டர் விருது சென்னை சிட்டி அணியின் ராபர்ட்டோ எஸ்லாவாவுக்கும் சிறந்த நடுகள வீரர் விருது சென்னை சிட்டி அணியின் நெஸ்டர் ஜீசஸ் கோர்டிலோவுக்கும், சிறந்த முன்கள வீரர் விருது சென்னை சிட்டி அணியின் பெட்ரோ மான்ஸிக்கும், சிறந்த பயிற்சியாளர் விருது சென்னை சிட்டி அணியின் அக்பர் நவாஸுக்கும் வழங்கப்பட்டது. தொடரின் நாயகனாக சென்னை சிட்டி அணியின் பெட்ரோ மான்ஸி தேர்வானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x