Published : 02 Mar 2019 02:59 PM
Last Updated : 02 Mar 2019 02:59 PM

நியூஸி.யின் மிகப்பெரிய டெஸ்ட் ஸ்கோரும்... இதுவரை இல்லாத மோசமான பவுலிங்குக்குச் சொந்தமான மெஹதி ஹசனும்

ஹாமில்டன் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை புரட்டி எடுத்த நியூஸிலாந்து அணி தன் டெஸ்ட் அதிகபட்ச ஒட்டுமொத்த ஸ்கோரான 715 ரன்களை எட்டியது, 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து டிக்ளேர் செய்தது.

 

அந்த அணியின் ராவல் 132, டாம் லேதம் 161, கேன் வில்லியம்சன் 200 நாட் அவுட் ஆகியோர் சதம் எடுத்து அசத்தினர்.

 

இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களில் சில...

 

இதற்கு முன்னர் நியூஸிலாந்து அணி 700 ரன்கள் என்ற மைல்கல்லை டெஸ்ட் போட்டியில் தொட்டதில்லை. முன்னதாக நியூஸிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஷார்ஜாவில் 2014-ல் 690 ரன்களை எடுத்ததே டெஸ்ட்டில் அதன் அதிகபட்ச அணி ஸ்கோராகும்.

 

இன்னிங்ஸ் அளவில் கேன் வில்லியம்சன் அதிவிரைவாக டெஸ்ட் போட்டிகளில் 6,000 ரன்களை எட்டிய முதல் நியூஸிலாந்து வீரர் ஆனார். நியூஸிலாந்து கேப்டன் 126 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களை எடுத்துள்ளார். ராஸ் டெய்லரைக் காட்டிலும் 19 இன்னிங்ஸ்கள் குறைவாக இவர் 6,000 ரன்களுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்.  உலக அளவில் டான் பிராட்மேன் 68 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எடுத்து அகற்ற முடியா முதல் இடத்தில் உள்ளார். கேரி சோபர்ஸ், ஆஸி.யின் ஸ்டீவ் ஸ்மித் 111 இன்னிங்ஸ்களில் 6000 டெஸ்ட் ரன்களை எடுத்து அடுத்த 2 இடங்களில் உள்ளனர். சங்கக்காரா 116 இன்னிங்ஸ்களிலும் சுனில் கவாஸ்கர் 117 இன்னிங்ஸ்களில் 6000 ரன்களை எடுத்துள்ளனர்.  விராட் கோலி 119 இன்னிங்ஸ்கள், ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் 120 இன்னிங்ஸ்கள். சேவாக் 123 இன்னிங்ஸ்களில் 6000 டெஸ்ட் ரன்களை எட்டியுள்ளார்.

 

715/6 என்ற ஸ்கோரில் நியூஸி.யின் ரன் விகிதம் ஓவருக்கு 4.38. இது 700 ரன்களுக்கும் மேல் அடித்த அணியின் 3வது சிறந்த ரன் விகிதமாகும். இதுவரை டெஸ்ட் கிரிகெட்டில் 24 முறை 700+ ஸ்கோர்கள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியை நினைத்தாலே வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸுக்கு வயிற்றைக் கலக்கும். ஏனெனில் 49 ஒவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 246 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். சிக்கன விகிதம் 5.02.  45 ஒவர்களுக்கும் மேல் ஒரு பவுலர் வீசியதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான சிக்கன விகிதமாகும் இது. மேலும் வங்கதேச பவுலரில் ஒருவர் ஒரு இன்னிங்சில் இவ்வளவு ரன்களை விட்டுக் கொடுத்தது மெஹதி ஹசன் தான்.

 

20 டெஸ்ட் சதங்களுடன் கேன் வில்லியம்சன் நியூஸி. பேட்ஸ்மென்களில் சதங்களில் முதலிடம் வகிக்கிறார். 7 டெஸ்ட் சதங்களை கேப்டனாக எடுத்துள்ளார், இதற்கு முன்னர் ஸ்டீபன் பிளெமிங்தான் கேப்டனாக அதிக சதங்களை எடுத்துள்ளார்.

 

நியூசிலாந்தின் டாப் 3 பேட்ஸ்மென்கள் சதம் எடுப்பது இது 3வது முறையாகும். இப்போது ராவல், லேதம், வில்லியம்சன். முன்னதாக, மொஹாலியில் இந்தியாவுக்கு எதிராக 2003-ல் மார்க் ரிச்சர்ட்சன், லூ வின்செண்ட், ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகிய டாப் 3 பேட்ஸ்மென்கள் ஒரே இன்னிங்ஸில் சதம் எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x