Last Updated : 21 Mar, 2019 11:16 AM

 

Published : 21 Mar 2019 11:16 AM
Last Updated : 21 Mar 2019 11:16 AM

5 சிஆர்பிஎப் வீரர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி; தோனி அணியும் தயார்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்களில் 5 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சத்தை கிங்ஸ்லெவன் பஞ்சாப் லெவன் அணி வழங்கியது.

12-வது ஐபிஎல் போட்டித்தொடர் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது, அதற்காக 8 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இதற்கு முன் ஐபிஎல் தொடக்க விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும்.

ஆனால், கடந்த பிப்ரவரிமாதம் 14-தேதி ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ஐபிஎல் தொடக்கவிழாவுக்கு செலவிடும் ரூ.20 கோடியை வழங்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்தது. இதனால், தொடக்க விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

பிசிசிஐ நிர்வாகத்தின் இந்த மனிதநேயச் செயலால் மற்ற அணிகளும் இதுபோன்று சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவ முன்வந்தன.

வரும் 23-ம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் போட்டியின் சிஎஸ்கே, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் அனைத்து தொகையையும் புல்வாமா தாக்குதலில் பலியானா சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்க சிஎஸ்கே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

வரும் சனிக்கிழமை நடக்கும் நிகழ்ச்சியின் போது, கவுரவ ராணுவ லெப்டினல் அதிகாரியாக இருக்கும் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஆர்பிஎப் அதிகாரிகளிடம் காசோலையை வழங்குகிறார்.

பிசிசிஐ நிதியுதவி வழங்கும் இந்த நிகழ்ச்சியும், சிஎஸ்கே நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியும் சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது, பிசிசிஐ நிர்வாகிகள், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதற்கிடையே கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி நிர்வாகம் புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களில் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சத்தை வழங்கியது.

தாக்குதலில் கொல்லப்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஜெய்மால் சிங், மணிந்தர் சிங், குல்விந்தர் சிங், சுக்ஜிந்தர் சிங், திலக் ராஜ் ஆகிய 5 வீரர்களும் பஞ்சாப், இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் குடும்பத்தினருக்கு  இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது. சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் சிஆர்பிஎப் டிஐஜி வி.கே. குந்தால் முன்னிலையில் வீரர்களின் குடும்பத்தினரிடம் காசோலை கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் வழங்கினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x