Last Updated : 30 Mar, 2019 07:34 AM

 

Published : 30 Mar 2019 07:34 AM
Last Updated : 30 Mar 2019 07:34 AM

இந்த சீசனின் முதல்-சஞ்சு சாம்ஸன் அபார சதம் வீண்: பவர்ப்ளேயில் வெற்றியை உறுதி செய்த வார்னர், பேர்ஸ்டோ காட்டடி- ராஜஸ்தான் மீண்டும் தோல்வி

பவர்ப்ளே ஓவரில் பாதி வெற்றியை உறுதி செய்த வார்னர், பேர்ஸ்டோவின் காட்டடி ஆட்டம், ரஷித் கானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, கடைசிநேர வின்னிங் ஹெலிகாப்டர் ஷாட் ஆகியவற்றால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஒரு ஓவர் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

 

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி பெறும் முதல் வெற்றி, அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

 

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. 199 ரன்கள் எனும் கடினமான இலக்கை விரட்டிய ஹைதராபாத் அணி 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் துருப்பாக இருந்த ரஷித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 198 ரன்களை சேஸிங் செய்தது வரலாறாகும். இதற்கு முன் எந்த அணியும் இந்த இலக்கை சேஸிங் செய்தது இல்லை.

 

இந்த சேஸிங் வெற்றிக்கு முக்கியக் காரணம், டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகிய இரு பேட்ஸ்மேன்களே. பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சை பொளந்து கட்டிய இருவரும் வெற்றியை ஏறக்குறைய இலகுவாக்கிவிட்டனர். உண்மையில் இருவரையும் கட்டுப்படுத்த ராஜஸ்தான் அணியில் உருப்படியான பந்துவீச்சாளர்கள் இல்லை.

 

54 பந்துகளில் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு உயர்த்தி, பவர்ப்ளேயில் 69 ரன்களைச் சேர்த்தனர். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளேயில் 35 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர்.

 

வார்னரின் காட்டியைப் பார்த்து இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ தனது பங்கிற்கும் ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை வெளுத்துவாங்கினார். 28 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். தொடக்க விக்கெட்டுக்கு இருவரும் 58 பந்துகளி்ல் 110 ரன்கள்  என்ற வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.

 

தமிழக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சில சிக்ஸர்களை விளாசி 15 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை வேகப்படுத்தினார்.

 

இறுதியில் வெற்றிக்கு 8 பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அனாயசமாக ஜோப்ரா ஆர்ச்சரின் வேகப்பந்துவீச்சில் சிக்ஸரையும், பவுண்டரியையும் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரஷித்கான்.

 

எச்சரிக்கை 

 

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் விதிக்கப்பட்டிருந்த ஒரு ஆண்டு தடை வார்னருக்கு 28-ம்தேதி நள்ளிரவோடு முடிந்தது. அவரின் இந்த காட்டடி ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல செய்தியாகவும், உலகக்கோப்பை அணியில் அனைத்து அணிகளுக்கும் இது மிகப்பெரிய எச்சரிக்கையாகும் இருக்கும். நிச்சயம் உலகக்கோப்பைப் போட்டியில் வார்னர், அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருக்கப் போவதில் சந்தேகம் இல்லை.

 

164 ரன்னுக்கு 3-வது விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 3 ரன்களைச் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து லேசாகத் தடுமாறியது. இதை ராஜஸ்தான் அணி பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால், யூசுப்பதான், ரஷித்கான் கைகொடுத்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர்.

 

பந்துவீச்சில் அசத்திய ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக்கொடுத்து ஜோஸ் பட்லர் விக்கெட் வீழ்த்தினார். இதில் 10 டாட் பந்துகள் என உலகத் தரம்வாய்ந்த லெக் ஸ்பின்னராகத் திகழ்கிறார்.

 

புவனேஷ்வர் மோசம்

 

பந்துவீச்சில் புவனேஷ்வர் குமாரின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது.டெத் பவுலர் என்று புவனேஷ்வர் குமாரை கூற முடியாத அளவுக்கு பந்துவீச்சு மோசாகிவருவது அவருக்கு மட்டுமல்ல, உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்கும் நல்லதல்ல. இந்த ஆட்டத்தில் வீசிய கடைசி ஓவர்களில் பெரும்பாலான பந்துகளை ஷாட் பிட்சுகளாகவும், ஓவர் பிட்சுகளாவும் வீசினார் புவனேஷ்வர். அதுமட்டுமல்லாமல் யார்கர் வீச முயன்று பலமுறை பவுண்டரிகளை வாரிக்கொடுத்தார். 4 ஓவர்கள் வீசிய பவுனேஷ்வர் குமார் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

 

சாம்ஸன் அபாரம்

 

sanjjpg100 

 

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை சஞ்சுசாம்ஸனின் முத்தாய்ப்பான ஆட்டத்தை குறிப்பிட்டாக வேண்டும். நிதானமாகத் தொடங்கி கடைசி நேரத்தில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை நொறுக்கி எடுத்துவிட்டார். கடைசி 5 ஓவர்களில் 76 ரன்களை ராஜஸ்தான் அணி சேர்த்தது. அதற்கு முக்கிக் காரணம் சஞ்சு சாம்ஸனின் அதிரடி ஆட்டம் தான். 34 பந்துகளில் அரைசதத்தையும், 54 பந்துகளில் சதத்தையும் சாம்ஸன் அடித்தார். இந்த ஐபிஎல் சீசனில் சதம் அடித்த முதல்வீரர் சஞ்சு சாம்ஸன். ஐபிஎல் வரலாற்றில் சாம்ஸன் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும்.

 

சாம்ஸனுக்கு துணையாக ஆடிய ரஹானேவும் குறைகூற இயலாத அளவுக்கு சிறப்பாக பேட் செய்தார். அதிரடியாக ஆடிய ரஹானே 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். 49 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்்த்து வலுவான கூட்டணியை உருவாக்கினார்கள்.

 

முதலில் பேட்டிங்

 

டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பட்லர், ரஹானே களமிறங்கினா்கள். இந்த முறை பட்லர் 5 ரன்களில் ரஷித்கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அதன்பின் சஞ்சு சாம்ஸன் களமிறங்கி , ரஹானேவுடன் சேர்ந்தார். இருவரும் நிதானாக ஆடிரன்களைச் சேர்த்து, பின்னர் அதிரடிக்கு மாறினர்.

 

 11 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் என்ற நிலையில்தான் இருந்தது.அதன்பின் சாம்ஸனின் அதிரடியால், 9 ஓவர்களில் 110 ரன்கள் சேர்த்தனர்.

 

சாம்ஸன் 34 பந்துகளிலும், ரஹானே 38 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். சாம்ஸன் தனது அரைசதத்தைக்கு 34 பந்துகளையும், அடுத்த அரைசதத்துக்கு 20 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.

 

சாம்ஸனுக்கு சளைக்காமல் பேட் செய்த ரஹானே நதீம், சந்தீப் சர்மா, புவனேஷ்வர் குமார் ஓவர்களில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். நதீம் வீசிய 16-வது ஓவரில் ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.

 

அடுத்து பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். சாம்ஸனுக்கு ஒத்துழைத்து பென் ஸ்டோக்ஸ் பேட் செய்தார். சித்தார்த் கவுல் வீசிய 17-வது ஓவரின் 5-வது பந்தில் சாம்ஸனுக்கு கேட்ச் வாய்ப்பை பேர்ஸ்டோ தவறவிட்டார்.

 

24 ரன்கள்

 

புவனேஷ்வர் குமார் வீசிய 18-வது ஓவரில் 4 பவுண்டரி, ஒருசிக்ஸர் என 24 ரன்கள் விளாசினார் சாம்ஸன். புவனேஷ் வீசிய 20-வது ஓவரில் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளும், சாம்ஸன் ஒரு பவுண்டரியும் அடித்து 54 பந்துகளில் சதத்தை நிறைவு செய்தார்.

 

கடைசி ஓவர்

 

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 55 பந்துகளில் 102 ரன்களிலும்(4சிக்ஸர், 10 பவுண்டரி) ஸ்டோக்ஸ், 16 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

சன்ரைசர்ஸ் அணி தரப்பில் 6 வீரர்கள் பந்துவீசியும் ரஷித் கான் மட்டுமே கட்டுக்கோப்பாக வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

 

இமாலய இலக்கு

 

199 ரன்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. வார்னர், பேர்ஸ்டோ இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடிக்கு மாறினர். குல்கர்னி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டார்.

பென் ஸ்டோக்ஸ் வீசிய 5-வது ஓவரில் வார்னர் 3 பவுண்டரிகளையும், பேர்ஸ்டோ ஒருபவுண்டரியும் அடித்து ரன்ரேட்டை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். ஆர்ச்சர் வீசிய 6-வது ஓவரில் பவுண்டரி அடித்து 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

 

இருவரின் காட்டடியை கட்டுப்படுத்தும் அளவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால், சன்ரைசர்ஸ் ஸ்கோர் எகிறியது. 53 பந்துகளில் 100 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எட்டியது.

 

முதல் விக்கெட்

 

பென்ஸ்டோக்ஸ் வீசிய 10-வது ஓவரில் குல்கர்னியிடம் கேட்ச் கொடுத்து வார்னர் 37 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 110 ரன்கள் என்கிற வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்து பிரிந்தனர். வார்னர் ஆட்டமிழந்த அடுத்த சிறிதுநேரத்தில் பேர்ஸ்டோவும் வெளியேறினார்.

 

கோபால் வீசிய 11-வது ஓவரில் குல்கர்னியிட் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார். அடுத்து வில்லியம்ஸன், விஜய் சங்கர் களத்தில் இருந்தனர்.

 

குல்கர்னி வீசிய 14-வது ஓவரில் சங்கர் இருபிரமாதமான சிக்ஸர்களை விளாசினார். உனட்கட் வீசிய 15-வது ஓவரிலும் சங்கர் ஒரு சிக்ஸரை தள்ளினார். இந்த ஓவரில் 4-வது பந்தில் திரிபாதியிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்ஸன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

கோபால் வீசிய 16-வது ஓவரில் லாங்ஆன் திசையில் கேட்ச் கொடுத்து விஜய் சங்கர் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மணிஷ் பாண்டே, அதே ஓவரில் ஒரு ரன் சேர்த்த நிலையில், எல்பிடபிள்யு முறையில் வெளியேறினார்.

 

தவறவிட்ட ராஜஸ்தான்

 

163 ரன்களுக்கு 3-வது விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்த 3 ரன்களைச் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த வாய்ப்பை ராஜஸ்தான் அணி கைப்பற்ற தவறவிட்டது. அடுத்து களமிறங்கிய யூசுப்பதான், ரஷித்கான் ஜோடி சேர்ந்தனர்.

 

ஆர்ச்சர் வீசிய 17-வது ஓவரில் யூசுப் பதான் இடுப்பளவு உயரத்திலேயே அற்புதமான சிக்ஸர் விளாசினார். உண்மையில் புகழக்கத்த ஷாட்களில் ஒன்றாகும். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர்.  கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவைப்பட்டது.

 

அருமையான ஷாட்

 

ஆர்ச்சர் வீசிய 19-வது ஓவரில் ைவட் உள்பட 4 ரன்களை பதான், ரஷித்கான் ஓடி எடுத்தனர். 5-வது பந்தை ரசித்கான் சந்தித்தார். கிரிஸீ விட்டு இறங்கி வந்து ஒரு பவுண்டரியும், அடுத்த பந்தில் அபாரமாக ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டில் சிக்ஸரும் அடித்து வெற்றியை உறுதி செய்தார் ரஷித்கான். 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது. யூசுப்பதான் 16 ரன்னிலும், ரஷித்கான் 15 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தன்.

 

ராஜஸ்தான் தர்பப்பில் கோபால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x