ஐசிசி ஒருநாள் தரவரிசை: வழக்கம்போல் அசைக்க முடியாத இடத்தில் கோலி, பும்ரா

ஐசிசி ஒருநாள் தரவரிசை: வழக்கம்போல் அசைக்க முடியாத இடத்தில் கோலி, பும்ரா

Published on

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சில் பும்ரா தொடர்ந்து முதலிடத்திலும் இருந்து  வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 310 ரன்கள் குவித்தார் கோலி இதனால், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த தொடரில் 202 ரன்கள் சேர்த்ததால், தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

கேதார் ஜாதவ் ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக விளையாடியதால், தரவரிசையில் 11 இடங்கள் முன்னேறி  24-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் 3 அரைசதம் உள்ளிட்ட 353 ரன்கள் விளாசிய தென் ஆப்பிரிக்க வீரர் குவின்டன் டீ காக் தொடர் நாயன் விருது பெற்றார். இதன் காரணமாக தரவரிசையில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 272 ரன்கள் சேர்த்த டூப்பிளசிஸ், பாபர் ஆசம் 5-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார்.

மற்றவகையில் பேட்ஸ்மேன் வரிசையில 7 முதல் 10 இடங்கள் வரை முறையே ஜோய் ரூட், பக்கர் ஜமான், மார்டின் கப்தில், சாய் ஹோப் உள்ளனர். 12-வது இடத்தில் ஷிகர் தவண் உள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 774 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், நியூசிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரஷித் கான் 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், 4-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். முதல் 5 இடங்களில் எந்த இந்திய வீரரும் இடம் பெறவில்லை.

அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து இந்திய அணியும் உள்ளன. தென் ஆப்பிரிக்காவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து 3-வது இடத்தையும், பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி, ஆஸ்திரேலியா 4-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி ஒரு புள்ளியைப் பெற்றுள்ளது, இலங்கை அணி இரு புள்ளிகளை இழந்துள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in