Published : 21 Mar 2019 02:48 PM
Last Updated : 21 Mar 2019 02:48 PM

ஐபிஎல் 2019: ஆர்சிபி வீரர் ஷிவம் துபே அவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டது எப்படி?

ஆர்சிபி அணியில் கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஷிவம் துபே ரூ.5 கோடி என்ற விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது அறிந்ததே. ஆனால் அவர் அவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட ஒரு போட்டி காரணமாக அமைந்தது.

 

அந்தப் போட்டியில் ஷிவம் துபேயின் பெயர் வெளிவரக்காரணமான நிகழ்வும் ஐபிஎல் ஏலமும்  ஒரேநாளில் நிகழ்ந்தது என்பதுதான் இதில் தற்செயல்.

 

மும்பைக்காக நல்ல ரஞ்சி சீசனில் ஆடினார் ஷிவம் துபே,  பரோடா அணிக்கு எதிரான போட்டியில் அவர் இடது கை ஸ்பின்னர் ஸ்வப்னில் சிங் ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய அன்று ஐபிஎல் ஏலம் நடந்தது.  5 பந்துகளில் 5 சிக்சர்கள் என்றவுடன் ஷிவம் துபே பெயர் பிரபலமடையத் தொடங்கியது.  இதனையடுத்து ஆர்சிபி அணி இவரை ரூ.5 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 

அதுவரை ஐபிஎல் விளையாடாத ஒரு வீரர் அவ்வளவு பெரிய தொகையில் ஏலம் எடுக்கப்பட்டது பலரையும் அதிசயிக்க வைத்தது. இவர் கடந்த 2 மாதங்களாக கீழ் முதுகு வலியினால் அவதிப்பட்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததால் சையத் முஷ்டாக் அலி டி20 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. ஆனால் இப்போது உடல்தகுதி பெற்றுவிட்டார் (!) என்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆட அவர் ஆர்வமுடன் இருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

முன்பெல்லாம் ரஞ்சி, துலிப் டிராபி உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ஒரு வீரரைக் கேட்டால் இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்பார்கள், அதில் ஒரு அர்த்தமிருந்தது, ஆனால் இப்போதெல்லாம் தெரு கிரிக்கெட்டில், மேலவீதி, கீழவீதி மேட்சில் 5 விக்கெட்டையோ 50 ரன்களையோ எடுத்தால் அவர் உடனே நான் இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்பதே லட்சியம் என்று கூறிவரும் நடைமுறையையும் பார்த்து வருகிறோம்.

 

ஷிவம் துபே இந்தக் காலத்து இளம் வீரர் அவரும் தன் கனவு பற்றி கூறும்போது, “இந்தியாவுக்கு ஆட வேண்டும், ஐபிஎல் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது எந்த ஒரு வீரரின் கனவாக இருக்கும், எனக்கு ஐபிஎல் மூலம் ஒரு கனவு நினைவாகியுள்ளது” என்கிறார்

 

மேலும் அவர், “கீழ் மிடில் ஆர்டரில் இறங்கி பினிஷராகச் செயல்படுவதுதான் என் வேலை. நான் 6ம் இடத்தில் இறங்குவேன் என்று நெஹ்ரா, கேரி கர்ஸ்டன் தெரிவித்தனர். அணிக்கு என்ன தேவையோ அதை நிறைவேற்றுவேன்.

 

நான் ரூ.5 கோடியைப் பற்றி சிந்திக்கவில்லை. கிரிக்கெட் ஆடத்தான் இங்கு வந்திருக்கிறேன். முதல் தர கிரிக்கெட்டில் நன்றாக ஆடியதால் ஏலத்தில் எடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு பணரீதியாக ஒரு எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் இவ்வளவு பெரிய தொகையினை எதிர்பார்க்கவில்லை.

 

என்னுடைய சிறுவயது முதலே சிக்ஸ் அடிக்கும் திறமை என்னிடம் இருந்து வருகிறது.  சிறுவயது முதலே நான் பவர் ஹிட்டர்தான்.  ஒரு மீடியம் பேஸ் பவுலராக என் வேகத்தை இன்னும் கூட்ட வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் அல்லது பவுலிங் ஆல்ரவுண்டர்  என்று பெயர் எடுக்க விரும்பவில்லை.  ஒரு முறையான ஆல்ரவுண்டராகவே இருக்க விரும்புகிறேன்”

 

இவ்வாறு கூறினார் ஷிவம் துபே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x