Published : 11 Mar 2019 02:37 PM
Last Updated : 11 Mar 2019 02:37 PM

விராட் கோலிக்கு கடும் சவால் அளித்த ஆஷ்டன் டர்னர்: பாக். அதிரடி பினிஷர் அப்துல் ரசாக்கிற்கு அடுத்த இடத்தில்

ஆஸ்திரேலியாவி புதிய பினிஷிங் ஹீரோவான ஆஷ்டன் டர்னர் நேற்று ‘உலகின் தலை சிறந்த பந்து வீச்சு’ என்பதை முறியடித்து 5 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி நம்ப முடியாத மகாவிரட்டலை ஆஸ்திரேலிய வெற்றியாக மாற்றினார்.

 

இவர் அடிக்க ஆரம்பித்தவுடன் விராட் கோலியின் களவியூக உத்தி பிசுபிசுத்துப் போனது, தள்ளி நிறுத்தினால் சிக்ஸ் அடித்தார், கொஞ்சம் நெருக்கமாக அமைத்தால் நான்கு  ரன்களுக்கு விரட்டினார்.  12/2 என்று இருந்த போது ஆஸ்திரேலிய அணியை தன் ‘உலகின் சிறந்த பந்து வீச்சு’ மூலம் நெருக்கியடித்து இன்னும் சில விக்கெட்டுகளை வீழ்த்த கோலி முயற்சி செய்யவில்லை, எல்லாம் தானாக நடக்கும் என்று அவர் கேப்டன்சி அமைந்தது. இதனால் பார்ட்னர்ஷிப் பில்ட் அப் ஆனது.  அதாவது பிட்சில் பனி விழுவதற்கு முன்பாகவே, முன்னதாகவே 7 ஓவர்களை விஜய் சங்கரையும் அரைக்கை பகுதி நேர பவுலர் கேதார் ஜாதவ்வையும் வீச வைத்து தன் கேப்டன்சி புரிதலின்மையை வெளிப்படுத்தினார்.

 

கடைசி 7 ஓவர்களில் 72 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர் குமார் ஓவரில் 20 ரன்களும், பும்ராவின் ஓவரில் 16 ரன்களும் விளாசப்பட்டது. பிறகு 47வது ஓவரில் புவனேஷ்வர் குமார் மீண்டும் 18 ரன்களைக் கொடுத்தார்.  பகுதி நேர பவுலர்களை விளாசினாலும் பரவாயில்லை எனலாம் புவனேஷ்வர், பும்ரா, சாஹல், குல்தீப் என்று மெயின் பவுலர்களுக்கே அடி.

 

ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் சாதித்த அதிகபட்ச இலக்கு விரட்டலாகும் இது.

 

நேற்று கடைசி 10 ஓவர்களில் இலக்கை விரட்டும்போது எடுத்த மொத்த ரன்களில் 68 ரன்களை ஆஷ்டன் டர்னர் எடுத்தார். இந்த 68 ரன்களை 29 பந்துகளில் எடுத்தார். அபுதாபியில் 2010-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி 10 ஒவர்களில் எடுக்கப்பட்ட ரன்களில் விரட்டலின் போது 35 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து பாகிஸ்தானின் அதிரடி பின்கள பினிஷர் அப்துல் ரஸாக் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

 

ரசாக் விரட்டும் போது கடைசி 10 ஓவர்களில் 87 ரன்கள் பாகிஸ்தானுக்குத் தேவைப்பட்டது, ஆஷ்டன் டர்னர் நேற்று விரட்டும் போது 10 ஓவர்களில் 98 ரன்கள் வெற்றிக்குட் தேவைப்பட்டது. 2013ல் இதே மைதானத்தில் ஜேம்ஸ் பாக்னர் கடைசி 10 ஓவர்களில் 96 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட போது 29 பந்துகளில் 67 விளாசினார், அதை டர்னர் நேற்று முறியடித்தார்.

 

ரன்கள் அடிப்படையில் ரசாக் முன்னிலையில் இருந்தாலும் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் கெவின் பீட்டர்சன் 2005-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்டலில் கடைசி 10 ஓவர்களில் 76 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்ட போது 25 பந்துகளில் 64 ரன்கள் விளாசி 256 என்று ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

 

மேலும் ஆஷ்டன் டர்னரின் நேற்றைய இன்னிங்ஸ் ஸ்ட்ரைக் ரேட் 195.34.  வெற்றிகரமான விரட்டலில் குறைந்தது 40 பந்துகளைச் சந்தித்த தொடக்க வீரர் அல்லாத ஒருவர் வைத்திருக்கும் அதிகப்படியான ஸ்ட்ரைக் ரேட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x